

அமர்நாத் புனித யாத்திரை நேற்று நிறைவடைந்தது. 59 நாட்களாக நடந்த இந்த யாத்திரையின்போது சுமார் 3.52 லட்சம் பக்தர்கள் தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள அமர்நாத்தில் குகை கோயில் சென்று பனி லிங்கத்தை வழிபட்டனர்.
இந்த யாத்திரை முடிவடைவதை குறிக்கும் வகையில் திபேந்திர கிரி தலைமையிலான துறவிகள் சூழ “சாரி முபாரக்” எனப்படும் சிவனின் திரிசூலம் நேற்று அதிகாலை குகைகோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து திரிசூலம் அங்கிருந்து மீண்டும் நகருக்கு கொண்டு வரப்பட்டது. பஹல்காமில் அடுத்த வாரம் லித்தர் ஆற்றங்கரையில் நடக்கும் சிறப்பு வழிபாடுக்குப்பிறகு தஷ்னமி கோவிலில் உள்ள நிலைக்கு திரிசூலம் வழக்கப்படி திரும்பிவிடும்.
மத்திய காஷ்மீரில் உள்ள பல்தால், தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் ஆகிய இருதடங்கள் வழியாக ஜூலை 2-ம்தேதி அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது.
பெரும்பாலான யாத்ரிகர்கள் குகைக் கோயில் செல்ல 16 கிமீ தூரமுள்ள பல்தால் வழித்தடத்தையே தேர்வு செய்தனர். ஆனால் பழக்கமான வழித்தடம் 45 கிமீ தொலைவுடைய பஹல்காம் பாதைதான்.
இந்த ஆண்டு யாத்திரையில் 4 பாதுகாப்புப்படை வீரர்கள், 30 யாத்ரிகர்கள் உள்பட 41 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.