‘‘கரோனா நோயாளிகள் குற்றவாளிகள் அல்ல’’- பிரதமர் மோடி ஆதங்கம்

‘‘கரோனா நோயாளிகள் குற்றவாளிகள் அல்ல’’- பிரதமர் மோடி ஆதங்கம்
Updated on
1 min read

கரோனா நோயாளிகள் குற்றவாளிகள் அல்ல, அவ்வாறு அவர்களை நடத்தக்கூடாது, இந்த எண்ணத்தை மாற்றுவதும், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸால் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. நாடுமுழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங் களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் தேதிகளிலும் ஆலோசனை நடத்தினார். முதல்வர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த 14-ம் தேதி மோடி அறிவித்தார். கடந்த 20-ம் தேதி முதல் பல்வேறு துறைகள் செயல்படவும், கடைகள், அலுவலகங்கள், குறிப்பிட்ட சில ஆலைகள் இயங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் எத்தகைய பலன்களை அளித்துள்ளன என்பது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டு வருகிறார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
‘‘கரோனா பாதிப்பு ஏற்பட்ட சூழலில் இருந்து தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டான சூழலில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது நமது கடமை. எனவே மத்திய, மாநில அரசுகள் கரோனா நோயாளிகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏதோ அவர்கள் குற்றவாளிகள் போல சமூகத்தில் எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in