

ஜம்மு காஷ்மீரில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 21 சுற்றுலா பயணிகளையும், மோசமாக காயம் அடைந்திருந்த பிரான்ஸை சேர்ந்த பெண் சுற்றுலா பயணியையும் இந்திய விமானப்படையினர் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.
காஷ்மீரில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சிந்து, நுப்ரா, ஷியாக் மற்றும் லடாக்கில் உள்ள கிளை நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடியது. அப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்தனர் .
ஆபத்தில் இருப்பதாகவும் விரைந்து காப்பாற்ற வேண்டுமென்றும் மர்கா பள்ளத்தாக்கிலிருந்து பிரிட்டன் சுற்றுலா பயணிகள் அனுப்பிய அவசர செய்தி லே பகுதியில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்துக்கு கிடைத்தது. வெள்ளத்தில் சிக்கியவர்களில் சிலர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
எனினும் அவசர செய்தி மாலை நேரத்தில்தான் கிடைத்தது. சூரியன் மறைந்த பிறகு வானிலை இன்னும் மோசமாகும் என்பதால் மீட்புப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
எனினும் மீட்க வந்த ஹெலிகாப்டரை பார்த்ததும் பிரிட்டன் சுற்றுலா பயணிகள் சைகை காட்டினர்.
இதையடுத்து அவர்களை எளிதில் கண்டறிய முடிந்தது. இதில் 21 பிரிட்டன் நாட்டவர் எவ்வித பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவருக்கு முதுகு, விலா எலும்பு உடைந்திருந்தது. அவர் லே விமான தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.