

கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களின் முதல்வர் களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸால் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800-க்கும் அதிகமானோர் உயிரிழந் துள்ளனர். கரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. நாடுமுழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊர டங்கு தொடர்பாகவும் மாநிலங் களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் தேதிகளிலும் ஆலோசனை நடத்தினார். முதல்வர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த 14-ம் தேதி மோடி அறிவித்தார். கடந்த 20-ம் தேதி முதல் பல்வேறு துறைகள் செயல்படவும், கடைகள், அலுவலகங்கள், குறிப்பிட்ட சில ஆலைகள் இயங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் எத்தகைய பலன்களை அளித்துள்ளன என்பது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டு வருகிறார்.
மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது படிப்படியாக தளர்த்துவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.