Published : 27 Apr 2020 07:41 AM
Last Updated : 27 Apr 2020 07:41 AM

பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கலாம்: கரோனா நிவாரண செஸ் வரி விதிக்க பரிந்துரை

பெரும் பணக்காரர்களுக்கான வரி விதிப்பு வரம்பை அதிகரிப்பதன் மூலமும், கரோனா நிவாரண வரி (செஸ்) விதிப்பதன் மூலமும் அரசுகூடுதலாக வருவாயைத் திரட்ட முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரையை 50 இளம் வரி விதிப்பு அதிகாரிகள் மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்துக்கு (சிபிடிடி)அளித்துள்ளனர்.

ஃபோர்ஸ் என்ற தலைப்பிலான (நிதி திரட்டும் ஆதார வழிகள் மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை)இந்த கொள்கைக் குறிப்பில் பல்வேறு பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன. கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை அரசு ஈடுகட்ட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய கடமை பெரும் பணக்காரர்களுக்கு உள்ளது என்றும் இத்தகைய பிரிவினருக்கு இரண்டு வழிகளில் வரி விதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாக விதிக்கலாம். ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 40 சதவீதம் வரை வருமான வரி விதிக்கலாம். அதேபோல ரூ.5 கோடிக்கு மேலான நிகர சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கு வரி விதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வரி விதிப்பு மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். இது தவிர அரசு முக்கிய 5 முதல் 10 திட்டங்களை கண்டறிய வேண்டும். இது பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக அமையும். இந்தத் திட்டங்களுக்கான செலவு மதிப்பை கணக்கிட்டு அதை அரசு இணையதளங்களில் வெளியிட வேண்டும். மக்களிடம் இருந்து கூடுதலாக திரட்டப்படும் நிதி ஆதாரம் முழுக்க முழுக்க இந்த 5 முதல் 10 திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு இதுநாள் வரை செலவிட்ட தொகையையும் அரசு தெரிவிக்க வேண்டும் என அந்த பரிந்துரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக கோவிட்-19 நிவாரண செஸ் என 4 சதவீதம் விதிக்கலாம். இதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.18 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என கணக்கிட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும் விதிக்கலாம்.

ஏற்கெனவே கரோனா தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பொதுமக்களை மேலும் வதைக்காமல் இத்தகைய நடவடிக்கை மூலம் வருமானம் ஈட்டலாம் என அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x