

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் போராடும் வீரர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி காட்டும் வழியில் நிச்சயம் தேசம் செல்லும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.
பிரதமர் மோடி இன்று 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில், “கரோனா வைரஸுக்கு எதிரான போரை மக்கள் முன்னின்று நடத்தினால் மட்டுமே வெல்ல முடியும். மக்கள் கவனக்குறைவாக தாங்கள் வசிக்கும் பகுதிக்கும், வேலை பார்க்கும் இடத்துக்கும் கரோனா வந்துவிடுமா என்று அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன், கவனத்துடன் இருக்க வேண்டும். நம்மை இன்னும் தாக்கவில்லையே என மனத் திருப்தி கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் பேச்சு குறித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்தப் பெருந்தொற்று நோயில் நம்முடைய கரோனா போர் வீரர்களான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் தேசத்துக்காக அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். அந்தப் போர்வீரர்களை ஒவ்வொருவரும் ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசு covidwarriors.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. கரோனாவுக்கு எதிராகப் போராட தனிமனிதர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இது வாய்ப்பை வழங்கும். பிரதமர் மோடி வழியில் இந்த தேசம் செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பின்பற்றக் கூறிய வழிமுறைகளைப் பின்பற்ற மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். உறுதியாக பிரதமர் மோடி காட்டிய வழியில் இந்த தேசம் செல்லும். மக்கள் ஒழுக்கத்துடன் நடந்தால் கரோனா பாதிப்பு குறைந்து அகன்றுவிடும் என்பதைத்தான் பிரதமர் மோடி மக்களிடம் தெரிவித்தார். கரோனாவுக்கு எதிரான போர் மக்கள் நடத்தும் போர் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்'' எனத் தெரிவித்துள்ளார்.