

கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்ட ரூ.27 ஆயிரம் கோடியின் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் இருப்பதும் அதன் ஒரு பகுதியை ஆட்சியாளர்கள் பயன்படுத்துவதும் வேடிக்கையாக உள்ளது என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒரு தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சமூக நீதி அமர்வு கூறும்போது, “கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக மாநில அரசுகள் பல ஆயிரம் கோடியை வசூலித்துள்ளன. ஆனால் அந்தப் பணம் விளம்பரத்துக்காகவும் நிர்வாகத்துக்காகவும் செலவிடப்பட்டுள்ளது. மேலும் ஏழை மக்களுக்கான அந்தப் பணத்தை சில ஆட்சியாளர்கள் பயன்படுத்தி உள்ளனர். இது வேடிக்கையாக உள்ளது” என்றனர்.
சமூகநல சட்டத்தின் (1996) செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இதன் அடிப்படையில், கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த ஒரு வாரியம் அமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
சமூக நல சட்டத்தின்படி, அனைத்து அரசு கட்டுமான திட்டங்களுக்கான செலவில் 1 சதவீதத் தொகையை செஸ் வரியாக மாநில அரசுகள் வசூலிக்க வேண்டும். அதை கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக செலவிட வேண்டும். இதன்படி இதுவரை மாநில அரசுகளால் ரூ.27 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அரசு இந்த சட்டத்தின் கீழ் வசூலித்த ரூ.898.3 கோடியில் வெறும் ரூ.65.44 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது. இதுபோல, ரூ.1,671 கோடி வசூலித்துள்ள உத்தரப் பிரதேச அரசு ரூ.195 கோடியையும் ரூ.1,448 கோடி வசூலித்துள்ள டெல்லி அரசு ரூ.39.72 கோடியையும் செலவிட்டுள்ளது.
நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் உதய் யு.லலித் கூறும்போது, “கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நல நிதியை நிர்வாக செலவுக்காகவும் விளம்பரத்துக்காகவும் மாநில அரசுகள் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மார்ச் வரை, நல நிதியிலிருந்து விளம்பரத்துக்காக செலவிட்ட ரூ.2.69 கோடியை டெல்லி அரசு திருப்பித் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர் நல நிதியின் மூலம் பயனடைந்தவர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசுகளுடன் இணைந்து, இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய தொழிலாளர் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.