டெல்லியில் மருந்து கிடைக்காததால் 2 தமிழர்கள் இறந்தார்களா? விசாரணைக்கு வலியுறுத்தும் மாநில சிறுபான்மை ஆணையம்  

டெல்லியில் மருந்து கிடைக்காததால் 2 தமிழர்கள் இறந்தார்களா? விசாரணைக்கு வலியுறுத்தும் மாநில சிறுபான்மை ஆணையம்  
Updated on
1 min read

டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பால் கடைசியாக 2 தமிழர்கள் உயிரிழந்தனர். நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கிடைக்காததுதான் இதற்குக் காரணம் எனப் புகார் எழுந்தது. இதன் மீது விசாரணை அமைக்க வேண்டும் என அம்மாநில சிறுபான்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவரான ஜபுரூல் இஸ்லாம் கான், உறுப்பினரான கர்தார் சிங் கோச்சர் ஆகியோர் துணைநிலை ஆளுநரான அனில் பைஜலுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் இருவரும் குறிப்பிடுகையில், ''கடந்த ஏப்ரல் 13-ல் ஹாஜி ரிஜ்வான் (57) ஏப்ரல், 22-ல் முகம்மது முஸ்தபா(60) ஆகியோருக்கு நீரிழிவு நோய்க்கான மருந்தும், குறித்த நேரத்தில் உணவும் அளிக்காமையால் இறந்துள்ளனர். டெல்லி அரசின் குறைபாட்டைக் காட்டும் இச்சம்பவம் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

முகாமில் இருப்பவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள், உகந்த நேரத்தில் உணவும் அளிக்காமையால் வாந்தி, மயக்கம், வயிறு கெடுதல் எனப் பல உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கும் உகந்த நேரங்களில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து 25 நாட்களான பின்பும் பல ஜமாத்தினர் முகாமிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குணமான இவர்களை ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தப்லீக் ஜமாத்தினர், கரோனா தொற்று சிகிச்சையிலும் அதன் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மார்ச் 1 முதல் 22 வரையிலான மத மாநாடுகளுக்கு வந்தவர்களில் சுமார் 600 தமிழர்களும் தம் வீடு திரும்ப முடியாமல் சிக்கினர்.

இவர்களில் டெல்லியின் அரசு மருத்துவமனைகளில் இதுவரை நான்கு தமிழர்கள் இறந்தனர். ஐந்தாவதாக இறந்த முகம்மது முஸ்தபாவின் மரணம் முதன்முறையாக முகாமில் நிகழ்ந்தது. இதுவன்றி, உ.பி.யின் மேற்குப்பகுதியில் உள்ள சம்பல் மற்றும் மேற்கு வங்க மாநில கடக்பூரிலும் இரண்டு தமிழர்கள் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரது நல்லடக்கமும் அவர்கள் குடும்பத்தினர் ஒப்புதலின் பேரில் இறந்த ஊர்களிலேயே செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in