

மும்பையில் சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 52 வயது தலைமைக் காவலர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மாநிலங்கள் நிலைமைதான் மோசமாக இருக்கிறது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே அதிக அளவில் கரோனா பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது மகாராஷ்டிர மாநிலம். இங்கு 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டும் 4,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மும்பையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனவுக்கு இதுவரை மகாராஷ்டிராவில் 323 பேர் பலியாகியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்த தலைமைக் காவலரின் மறைவு குறித்து மும்பை மாநகர போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''மும்பையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த 52 வயதான சந்தீப் சர்வே, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகி கரோனாவோடு போராடி வந்தார். சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் மும்பை மருத்துவமனையில் உயிரிழந்த அவரது சோகமான மறைவு குறித்து மும்பை காவல்துறை உங்களுக்கு வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்.''
இவ்வாறு மும்பை மாநகர போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது.