

காலி கண்டெய்னர் போல் நூதனமாக ரகசிய அறைகளை உருவாக்கி லாரியில் ரூ.2 கோடி மதிப்பில் கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்.
கரோனாவால் அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கிலும் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள் அடங்கியபாடில்லை. குறைந்த அளவில் கடத்தி வந்தவர்கள் கரோனா சூழலைப் பயன்படுத்தி அதிக அளவில் கஞ்சா கடத்தி சிக்கியுள்ளனர்.
ஒடிசாவில் இருந்து அலிகருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக அம்மாவட்டக் காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அந்நகரின் உள்ளே நுழையும் சாலைகள் அனைத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், குவார்சி எனும் இடத்தில் கண்டெய்னருடன் வந்த லாரியும் சோதனையிடப்பட்டது. அத்தியாவசிய உணவுப்பொருள் பட்டியலில் உள்ள உருளைக்கிழங்கை அலிகரில் இருந்து ஒடிசாவிற்கு விநியோகித்துத் திரும்புவதாக அதன் ஒட்டுநர் கூறினார்.
கண்டெய்னரின் பின்புறத்தைத் திறந்து பார்த்தபோதும் அது காலியாகவே இருந்தது. எனினும், சந்தேகம் தீராத அலிகர் போலீஸார் அந்த லாரியின் கீழ்ப்புறத்திலும் சோதனை செய்தனர். அதில் இருந்த ரகசிய அறை கண்டெய்னர் மற்றும் ஓட்டுநர் பகுதிக்கு இடையே சிறிதாக அமைக்கப்பட்டிருந்தது. இதனுள், 950 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.1 கோடி விலையில் வாங்கி வரப்பட்ட இந்த கஞ்சாவின் சந்தை மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இதன் ஓட்டுநர் மனோஜ் குமார் மற்றும் உதவியாளர் சிசுபான் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் கிடைத்த தகவலின் பேரில் லோகேஷ், ரிங்கு சர்மா ஆகிய முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
நொய்டாவில் வசிக்கும் இந்த கஞ்சா கடத்தல் கும்பலின் தலைவன் தப்பிவிட்டார். மீதியுள்ளவர்கள் மீது வழக்குப் பதிவாகி சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’இணையத்திடம் அலிகர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரும் தமிழருமான ஜி.முனிராஜ் கூறும்போது, ''திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகள் பாணியில் இந்த கஞ்சா கடத்தல் நடைபெற்றது. மூன்று மாநில வாகன எண்களைப் போலியாகப் பயன்படுத்தி வழியில் இடப்பட்ட சோதனைகளில் ஏமாற்றியுள்ளனர்.
இதேபோல், சிசிடிவியில் இருந்தும் தப்ப, லாரியின் கண்டெய்னருக்கும் மூன்று இடங்களில் பெயிண்ட் அடித்து வர்ணங்களையும் மாற்றியுள்ளனர். இந்த அளவிலான கஞ்சா இதுவரை இப்பகுதியில் சிக்கியதில்லை'' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நுணுக்கமாக சோதனையிட்டு கடத்தலைக் கண்டுபிடித்த போலீஸார் குழுவிற்கு உடனடியாக ரூ.5,000 ரொக்கத் தொகையைப் பரிசாக அளித்து அதிகாரி முனிராஜ் பாராட்டியுள்ளார்.