

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டு வரப்பட்டுள்ள லாக் டவுன் நடவடிக்கையால் சிறார் ஆபாசப் படங்களைப் பார்க்கும் அளவு 95 சதவீதம் அதிகரித்துவிட்டதாக செய்தி வெளியானது. இதனையடுத்து, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லாக் டவுன் காலத்தில் சிறார் ஆபாசக் காட்சிகள், வீடியோக்கள் ஆன்லைனில் எவ்வாறு திடீரென அதிகரித்தது என்பதற்கான விளக்கத்தை வரும் 30-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அந்த 3 நிறுவனங்களுக்கும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸில் தெரிவித்துள்ளது.
லாக் டவுன் காலத்தில் சிறார் ஆபாசக் காட்சிகள் அதிகரித்துள்ளதும், அதன் தேடுதல் போக்குவரத்து 95 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் இந்தியா குழந்தைகள் பாதுகாப்பு நிதி எனும் அமைப்பு சமீபத்தில் ஆய்வுஅறிக்கையை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அளித்தது. இதை அடிப்படையாக வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், “ட்விட்டர் தளத்தில் கணக்குத் தொடங்க ஒருவருக்கு 13 வயது இருந்தாலே போதுமானது எனத் தெரிவித்துள்ளீர்கள். ஆனால், 13 வயதுக் குழந்தையை இதில் அனுமதித்தால், மற்றவர்களை இதில் ஆபாசமான காட்சிகளை, படங்களை, இணைப்புகளைப் பதிவிட அனுமதிக்கக் கூடாது. ட்விட்டர் மூலம் குழந்தைகள் ஆபாசப் படங்கள், இணைப்புகள் அதிகம் பகிரப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இதேபோல வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், “வாட்ஸ் அப் குழுக்களில் சிறார் ஆபாசக் காட்சிகள், இணைப்புகள், ட்விட்டர் இணைப்புகள் பகிரப்படுகின்றன. இது மிகவும் கவலையும், தீவிரத்தன்மையும் கொண்டது” எனத் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்துக்கு என்சிபிசிஆர் அனுப்பிய நோட்டீஸில், “கூகுள் ப்ளே ஸ்டோரில் சிறார் ஆபாசப் படங்களைப் பார்க்கும் செயலிகள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற செயலிகளை அனுமதித்தது மிகவும் ஆபத்தானது” எனத் தெரிவித்துள்ளது.