டிரக்கில வெங்காயம் வைத்திருந்தால் போதும்; 1300 கி.மீ. பயணம் சாத்தியம்: லாக் டவுனை வென்ற மும்பை நபரின் வினோத முயற்சி

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
2 min read

டிரக்கில் வெங்காயம் வைத்திருந்தால் போதும். தனது சொந்த கிராமத்திற்குச் செல்ல 1300 கி.மீ. பயணம் சாத்தியம் என்று மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் நிரூபித்துள்ளார்.

இந்தியாவில் முதல் கட்ட லாக் டவுனை அமல்படுத்தியபோதே நகரங்களிலிருந்து வாகனங்களிலும் நடைபயணமாகவும் சொந்த ஊர்போய்ச் சேர்ந்தவர்கள் ஏராளம். சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டவர்களும் உள்ளனர்.

மும்பை விமான நிலையத்தில் பணிபுரியும் பிரேம் மூர்த்தி பாண்டே, அலகாபாத்தின் புறநகரில் உள்ள தனது சொந்த கிராமத்தை அடைய ஒரு வினோத முயற்சியை மேற்கொண்டார்.

தனது 1,300 கி.மீ. டிரக் பயணம் குறித்து பிரேம் மூர்த்தி பாண்டே கூறியதாவது:

''லாக் டவுனின் முதல் கட்டத்தை நான் மும்பையில் கழித்தேன். ஆனால் பின்னர் கட்டுப்பாடுகள் மேலும் தொடரக்கூடும் என்று தெரிந்தது. உண்மையில் நான் வசிக்கும் அந்தேரி கிழக்கில் ஆசாத் நகர் மிகவும் நெரிசலான பகுதி. மேலும் கரோனா வைரஸ் பரவுவதற்கான பெரிய ஆபத்து அங்கு உள்ளது. எனவே அங்கிருந்து எப்படியாவது ஊர்போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று தோன்றியது.

பேருந்துகள், ரயில்கள் ஓடவில்லை. இந்த நேரத்தில் அரசாங்கம் ஒரு வழியைத் திறந்துவிட்டதை அறிந்தேன். பழம், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்துக்கு லாக் டவுனில் தளர்வு இருந்தது. இப்படிச் செய்தால் என்ன என்று யோசித்தேன். உடனே ஆயத்தமானேன்.

ஏப்ரல் 17 அன்று, நாசிக் அருகே பிம்பல்கானுக்கு சுமார் 200 கி.மீ. தூரத்தில் ஒரு மினி டிரக்கை வாடகைக்கு எடுத்தேன். அங்கு, தர்பூசணிகளை ரூ.10,000 க்கு வாங்கி, வாகனத்தை மும்பைக்குத் திருப்பிச் செலுத்தினேன்.

ஏற்கெனவே மும்பையில் ஒரு வியாபாரியுடன் இதற்காக ஒப்பந்தம் செய்திருந்தேன். அடுத்து, வெங்காயத்தில் ஒரு நல்ல ஒப்பந்தத்திற்காக பிம்பல்கான் சந்தைக்குச் சென்றேன். ஒரு கிலோ ரூ.9.10 என்ற வீதத்தில் 25,520 கிலோ வெங்காயம் கிடைத்தது. ரூ .2.32 லட்சம் அதற்காக செலவு செய்தேன்.

அதன் பின்னர் ரூ.77,500 க்கு ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்து ஏப்ரல் 20 அன்று வெங்காயத்துடன் 1,300 கி.மீ. பயணத்தில் அலகாபாத்திற்குப் புறப்பட்டேன்.

ஏப்ரல் 23 அன்று அங்கு வந்து நேராக நகரின் புறநகரில் உள்ள முண்டேரா மொத்த விற்பனை சந்தைக்குச் சென்றேன். துரதிர்ஷ்டவசமாக, எடுத்து வந்த சுமைக்குப் பணம் செலுத்தும் எவரையும் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே எனது சொந்த கிராமமான கோட்வா முபர்க்பூருக்கு ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் வழியிலேயே வண்டியை நிறுத்தினேன். வெங்காயம் அங்கே பத்திரமாக ஒரு இடத்தில் இறக்கி வைக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை தூம்கஞ்ச் காவல் நிலையத்திற்கு வந்ததும் முதல் வேலையாக, ஒரு மருத்துவக் குழுவைச் சந்தித்தேன். அவர்கள் பரிசோதனை செய்தனர். மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்துள்ள வெங்காயம் இங்கு பெருமளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அது விற்றுத் தீர்ந்த பிறகு நிச்சயம் எனது நாசிக் வெங்காயத்திற்கு தேவை ஏற்படும் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு பிரேம் மூர்த்தி பாண்டே தெரிவித்தார்.

இதுகுறித்து டிபி நகர் காவல் பொறுப்பாளர் அரவிந்த்குமார் சிங் கூறுகையில், ''மும்பையிலிருந்த சொந்த ஊருக்கு வந்துவிடவேண்டுமென்ற உணர்வோடு ஏதேதோ முயற்சிகளில் ஈடுபட்டு பாண்டே வந்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை பாண்டேவை நாங்கள் முதலில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம். பரிசோதனைக்குப் பிறகு அவரை தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளோம். அவர் தற்போது வீட்டிலேயே இருக்கிறார்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in