ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் புதிதாக வழங்கிய பணி நியமனங்களை திரும்ப பெறும் நிலையில் நிறுவனங்கள்

ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் புதிதாக வழங்கிய பணி நியமனங்களை திரும்ப பெறும் நிலையில் நிறுவனங்கள்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால், பல நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் வழங்கிய பணி நியமனங்களைத் திரும்பப் பெறும் நிலைக்கு ஆளாகியுள்ளன.

ஊரடங்கு காலம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் தொழில்கள், வர்த்தகம், உற்பத்தி என அனைத்துமே முற்றிலுமாக முடங்கியுள்ளன. இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டு ஜிடிபி மொத்தமாக 1.1 - 1.2% என்ற அளவில்தான் இருக்கும் என்கின்றனர். இதனால் நிறுவனங்கள் வருவாய் ஏதுமில்லாமல் இருக்கின்றன. இந்த இழப்பில் இருந்து மீண்டும் பழையபடி லாபம் ஈட்டுவதிலும் சிக்கல்களும் நிலையற்ற தன்மையும் உள்ளன. எனவே நிறுவனங்கள் ஆட்குறைப்பு, செலவு குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

ஏற்கெனவே புதிதாக வேலைக்கு எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்பு வழங்கிய பணி நியமனங்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதில் மூத்த நிர்வாகிகளின் நியமனங்களும் கூட உள்ளன. கடந்த 10 நாட்களில் பல நிறுவனங்கள் இத்தகைய முடிவை எடுத்து செயல்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. அவற்றில் சிலர் வேலைக்கு எடுக்கப்பட்டு புரொபேஷன் காலத்தில் இருப்பவர்களும் வேலையை விட்டு நீக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் நிறுவனங்களின் பணி காலியிடங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன.

ஊரடங்கு முடிந்து பழையபடி தொழில் நடவடிக்கைகளும் நுகர்வும் இருந்தால் மட்டுமே பலரின் வேலைவாய்ப்பு காப்பாற்றப்படும். இல்லையெனில் பலர் தங்கள் வேலையையும் வருமானத்தையும் இழக்க நேரிடும். இது பலதரப்பட்ட துறை சார்ந்த பணியாளர்களிடமும், வேலைக்குக் காத்திருப்பவர்களிடமும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக வேலை வாய்ப்பு சேவை நிறுவனங்களும் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை எத்தனை மாதங்கள் நீடிக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in