

கரோனா வைரஸ் பாதிப்பின் இக்கட்டான நேரத்தில் இரவு பகல் பாராமல் உழைக்கும் போலீஸார், மருத்துவர்கள், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது எந்த அடிப்படையில் நியாயம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி, டிஆர் உயர்வு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
2021-22 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் டிஏ, டிஆர் ஆகியவற்றுக்காக மொத்தம் ரூ.37,530 செலவிட வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசின் டிஏ, டிஆர் முறையையே பின்பற்றி வருகின்றன. மாநில அரசுகளும் இந்த உயர்வை நிறுத்தினால் ரூ.82,566 கோடி சேமிக்க முடியும். மத்திய அரசு, மாநில அரசுகளும் இந்த உயர்வை நிறுத்துவதன் மூலம் ரூ.1.20 லட்சம் கோடி சேமிக்க முடியும். கரோனாவுக்கு எதிரான போரில் இன்னும் வேகமாகச் செயல்பட முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி மூத்த தலைவரும் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மணிஷ் திவாரி உள்ளிட்டோர் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்ததில் ஏதேனும் நியாயமான காரணங்கள் இருக்கிறதா?
கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் இந்த நேரத்தில் அரசு ஊழியர்கள், போலீஸார், மருத்துவர்கள் அதிகமான அழுத்தத்துடன், பன்மடங்கு பணிச்சுமையைத் தாங்கி இரவு பகலாகப் பணியாற்றுகிறார்கள். இவர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்ததில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா? மத்திய அரசின் இந்த முடிவால் 4-வது மற்றும் 5-வது நிலையில் உள்ள பணியாளர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாவார்கள். ஓய்வூதியத்தை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்களை ஏன் நோகடிக்கிறீர்கள்?
மத்திய அரசு தனது வீணான செலவுகளை ஏன் நிறுத்தக்கூடாது. ஏற்கெனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட செலவில் 30 சதவீதம் செலவை ஏன் குறைத்துக்கொள்ளக்கூடாது. ரூ.1.25 லட்சம் கோடி புல்லட் ரயில் திட்டம், ரூ.20 ஆயிரம் கோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடம் எதற்கு? இதுபோன்ற தேவையற்ற செலவுகளை நிறுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.