ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கரோனா வைரஸின் 2-வது கட்ட அலை ஏற்பட வாய்ப்பு: அறிவியல் வல்லுநர்கள் எச்சரிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
3 min read

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறைந்து, லாக் டவுன் தளர்த்தப்பட்ட பின் ஜூலை மாதம் இறுதி, ஆகஸ்ட் மாதங்களில் அல்லது பருவமழை காலத்தில் கரோனாவின் 2-வது கட்ட அலை ஏற்பட்டு அதிகமானோர் பாதிக்கப்படலாம் என்று அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

லாக் டவுன் தளர்த்தியபின், மக்கள் எவ்வாறு சமூக விலகலைக் கடைப்பிடிக்கிறார்கள், முகக்கவசம் அணிந்து கரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 2-ம் கட்ட வைரஸ் அலையில் பாதிப்பின் உச்சம் இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அப்போது 518 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை எட்டியுள்ளது. உயிரிழப்பும் 775 ஆக அதிகரித்துள்ளது. சமூக விலகல் இருந்தும், முகக்கவசம் அணிந்தும், ஊரடங்கு இருந்தும் இந்த பாதிப்பு இருந்துள்ளது

இந்நிலையில் வரும் மே 3-ம் தேதிக்குப் பின் 2-ம்கட்ட லாக் டவுன் முடிந்து தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. லாக் டவுனை தளர்த்திய பின் 2-்ம் கட்ட அலை உருவாக வாய்ப்புள்ளதாக ஷிவ் நாடார் பல்கலைக்கழக்கத்தின் கணித்துதறை பேராசிரியர் சமித் பட்டாச்சார்யா எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டபின் மக்கள் எவ்வாறு சமூக விலகலையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து கரோனாவின் 2-ம் கட்ட அலை உருவாகும். லாக் டவுன் தளர்த்தப்பட்டு சில வாரங்கள், அல்லது சில மாதங்களுக்குப் பின் கூட 2-ம் கட்ட அலை உருவாகலாம். எங்கள் கணிப்பின்படி ஜூலை கடைசி முதல் ஆகஸ்ட் மாதத்தில் 2-ம் கட்ட அலை இருக்கும். குறிப்பாக பருவமழை காலத்தில் இருக்கும். அந்த நேரத்தில் நாம் எவ்வாறு சமூக விலகலைக் கடைப்பிடிக்கிறோம் என்பதில்தான் பரவலைக் கட்டுப்படுத்தும் திறமை இருக்கிறது

மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவுடன் கரோனாவின் 2-ம் கட்ட பாதிப்பு தொடங்கும். சீனாவில் கூட இந்த 2-ம் கட்ட பாதிப்பு இருந்தால், இன்னும் பல இடங்களில் விதிமுறைகளைத் தளர்த்தவில்லை.

அதேசமயம் சீனா, ஐரோப்பிய நாடுகளில் கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. ஆதலால் ஒருமுறை பாதிக்கப்பட்டால் மீண்டும் வராது எனக் கூற முடியாது. கரோனாவில் பாதிக்கப்பட்டவருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்,

அதனால் 2-ம் கட்ட பாதிப்பு இருக்காது எனக் கூற இயலாது, அதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆதலால் மக்களின் பழக்கத்தைப் பொறுத்து 2-ம் கட்ட அலை தீவிரமாகலாம் அல்லது தணியலாம்’’ எனத் தெரிவித்தார்.

இதே கருத்தைத்தான் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (ஐஐஎஸ்சி) பேராசிரியர் ராஜேஷ் சுந்தரேஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எங்கள் ஆய்வின்படி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியபின் கரோனாவின் 2-ம் கட்ட அலை அல்லது பாதிப்பு வரலாம்.

பெங்களூரு, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் 2-ம் கட்ட பாதிப்பு அதிகம் ஏற்பட வாயப்புள்ளது. தீவிரமாக நடவடிக்கை எடுத்து நோயாளிகளைக் கண்டுபிடித்தல், சிகிச்சையளித்தல், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்யாவிட்டால் பாதிப்பு தீவிரமாகும்.

ஒவ்வொரு நகரிலும் ஊரடங்கைத் தளர்த்தும் காலத்துக்கு ஏற்ப, மக்கள் இயல்பு நிலைக்கு வர எடுத்துக்கொள்ளும் கால அளவை வைத்து 2-ம் கட்ட அலை உருவாகும். ஆதலால் லாக் டவுன் முடிவைத் தளர்த்தும் கடினமான முடிவை எப்படிக் கையாளப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது.

நிச்சயமாக படிப்படியாகத்தான் லாக் டவுன் தளர்த்தலைச் செயல்படுத்த முடியும். மக்களின் உடல் நலம், சுகாதாரத்தேவைகள், வசதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துதான் லாக் டவுனை தளர்த்த வேண்டும். பெரும்பாலான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று சிலர் அந்தத் திறன் இல்லாமல் இருந்து லாக் டவுன் நீக்கப்படும் பட்சத்தில் உயிரிழப்பு அதிகமாக இருக்கும்.

ஆனால் இந்த பாதிப்புகளின் வீரியத்தை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்தபின்பும் சமூக விலகல், முகக்கவசம் அணிதல், சுத்தம் ஆகியவற்றை தீவிரமாகப் பயன்படுத்துவதைப் பொறுத்து தணிக்க முடியும். சந்தையில் கரோனா தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வரும் வரை அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அவரை தனிமைப்படுத்துதல், சமூக விலகலைத் தீவிரப்படுத்துவதைக் கடைப்பிடிக்க வேண்டும்

பருவமழை காலத்தில் ப்ளூ காய்ச்சல் இயல்பாகவே பரவும். கரோனாவுக்கும் அறிகுறியாக ப்ளூ காய்ச்சல் உருவாகும். ஆதலால், காய்ச்சல் வரும் போது கவனக்குறைவாக இல்லாமல் சிகிச்சையளிக்க வேண்டும். அந்த நேரத்தில் பரிசோதனையை அரசு தீவிரப்படுத்தி, ஹாட் ஸ்பாட் ஏதும் இருந்தால் பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in