

சீனாவிலிருந்து கோவிட்-19 மருந்துப் பொருட்களை ஏற்றி வந்த சரக்கு விமானம் டெல்லி வந்தடைந்ததாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 24 ஆயிரத்து 506 பேர் கரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்தது. இதில் 5,062 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 18,668 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கரோனாவின் தாக்கம் கடுமையாகி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. வைரஸ் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரை பரிசோதனை செய்து கண்டறிவதற்கான மருத்துவ உபகரணங்கள் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. எனினும் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட உபகரணங்களில் சோதனை முடிவுகள் தவறாகக் காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதனை அடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு சோதனை செய்வதை இரு தினங்களுக்கு நிறுத்துமாறு கூறியது. சீனாவிலிருந்து வந்த ரேபிட் பரிசோதனைக் கருவியால் நோய் அறிகுறியைக் கண்டறிய முடியுமே தவிர, நோயை உறுதிப்படுத்த முடியாது. பிசிஆர் எனப்படும் கருவியில்தான் நோய்த் தொற்று உறுதியைத் தெரிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில் மேலும் 18 டன் மருந்துப் பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை கூறியுள்ளதாவது:
''சீனாவின் ஷாங்காயில் இருந்து கோவிட்-19 மருந்துப் பொருட்களை ஏற்றி வந்த ஒரு ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானம் எஸ்ஜி 70717 டெல்லியில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை இரவு) தரையிறங்கியது.
இந்த விமானம் இந்தியாவுக்குத் தேவையான சுமார் 18 டன் மருத்துவ மற்றும் அவசரகாலப் பொருட்களை எடுத்து வந்துள்ளது. எங்கள் விமானம் நாட்டிற்குத் தேவைப்படும் நேரத்தில் சேவையில் ஈடுபட்டதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்''.
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.