Published : 25 Apr 2020 04:16 PM
Last Updated : 25 Apr 2020 04:16 PM

1918 ஸ்பானிஷ் காய்ச்சலைக் கையாண்டது எப்படி?: பொருளாதாரத்திலிருந்து மீண்டது எப்படி? தரவுகளைக் கேட்கிறது மத்திய அரசு

புதுடெல்லி

இந்தியாவை உலுக்கிய 1918 ஸ்பானிஷ் காய்ச்சலை இந்தியா எவ்வாறு கையாண்டது என்பது குறித்து தரவுகளை ஆராய்ந்து அனுப்பிவைக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் கோவிட்- 19 பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 24,508 என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 775 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமாகி மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 5,062 ஆகும்.

இந்தியா இன்று ஒரு கடும் விவாதத்திற்குள் சிக்கியுள்ளது. வைரஸ் நோயிலிருந்து மக்களை மீட்பதா, லாக் டவுனை நீட்டிக்காமல் பொருளாதாரத்தை மீட்பதா? இந்த விவாதத்திற்குத் தீர்வு காண மத்திய அரசு யோசித்து வருகிறது.

தற்போது ஒரு புது வழியை இதற்காக கண்டறிந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அவற்றின் ஆவணக் காப்பகங்கள் மற்றும் மற்ற ஆய்வுகளின் வழியாக 1918-ல் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்பானிஷ் புளு எனும் வைரஸ் காய்ச்சலினால் ஏற்பட்ட இழப்புகளும் பொருளாதார மீட்புகளும் குறித்து ஆராயுமாறு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

லாக் டவுன் மற்றும் தொற்றுநோய் தொடர்பான காரணங்களால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வறண்ட நிலையில் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 14-ல் நாடு தழுவிய லாக் டவுனை மேலும் மூன்று வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்த பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற்றம், பொருளாதாரத் தேடல் பற்றியெல்லாம் விவாதங்கள் எழுந்தன. மேலும் ஒரே நேரத்தில் கரோனா வைரஸிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்கும் தொழில் மற்றும் வணிகங்களைக் காப்பாற்றுவதற்கும் இடையிலான ஓர் உகந்த சமநிலையைக் கோரும் இந்த விவாதங்கள் மேலும் மேலும் விடைகளைத் தேடி வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு உத்தரவின்படி, 'கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கடைகளை (மால்களில் அல்ல) நகராட்சி அல்லாத பகுதிகளில் திறக்கவும், கிராமப்புற இந்தியாவில் அறுவடை மற்றும் விதைப்பு நடவடிக்கைகளை தொடரவும்' அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19க்கான சிகிச்சைகள் முழுமை பெறாமலேயே லாக் டவுன் தளர்த்தப்படலாமா என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது. இப்படிப்பட்ட குழப்பமான தருணங்களில் முன்னோடியான சம்பவங்களில் உள்ள தீர்வுகளைப் பொருத்திப்பார்ப்பது அரசின் நடைமுறைகளில் ஒன்றாகும்.

அவ்வகையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம், நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களிடம் சில தரவுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

1918 ஆம் ஆண்டு மிகப்பெரிய வைரஸ் நோய்த் தாக்குதலுக்கு இந்தியா ஆளானது. 12லிருலுந்து 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இதனை '1918 எச் 1 என் 1' என அழைக்கின்றனர். பொதுவாக 'ஸ்பானிஷ் காய்ச்சல்' என அழைக்கப்படும் இந்த தொற்றுநோயை இந்தியா எவ்வாறு கையாண்டது மற்றும் தொற்றுநோய் முடிவுக்கு வந்த பின்னர் பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த ஒரு ஆய்வு அறிக்கையைத் தயார் செய்து அனுப்பிவைக்கும்படி நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிடமும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சிக் குழுக்களை அமைக்கவும், பல்கலைக்கழக வளாகங்களுக்கு அருகிலுள்ள கிராமங்களில் கோவிட்- 19 பற்றிய விழிப்புணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆராய வேண்டுமெனவும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் தனிச் செயலாளர் பி.வி.ஆர்.சி புருஷோத்தம் பல்கலைக்கழகங்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

''கடிதம், அதிகாரத்துவமற்ற ஒரு பார்வையில், கோவிட்-19 பிரச்சினைகளின் பார்வையில், வைரஸ் தொற்றுக்கு எந்த சிகிச்சையும் இல்லாமல் லாக் டவுனிலிருந்து வெளியேறினால் விளைவு எவ்வாறு இருக்கும் என ஒரு கேள்வியை இக்கடிதம் முன்வைக்கிறது.

இரண்டாவதாக பல்கலைக்கழகங்களில் அருகில் உள்ள கிராமங்களில் கோவிட்-19 குறித்த விழிப்புணர்வு எவ்வாறு உள்ளது என நேரடியாகக் களப்பணியில் ஈடுபட்டுக் கண்டறிய ஒரு குழு அமைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்தது, பெரும்பாலான பழைய பல்கலைக்கழகங்கள், தங்கள் ஆவணக் காப்பகங்களில், 1918 ஆம் ஆண்டு தொற்றுநோய் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் எவ்வாறு கையாளப்பட்டது என்பது குறித்த பல தகவல்களைக் கொண்டுள்ளன. 1918-ன் ஸ்பானிஷ் புளு காய்ச்சலினால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர் பொருளாதாரத்தில் இந்தியா மீண்டும் உயர்ந்தது எப்படி என்பதற்கான பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தீர்வுகள் தேவைப்படுகின்றன, அவை பரந்துவிரிந்த அளவில் உள்ளூர் பகுதிகளுக்கு ஏற்றவாறு பொருளாதாரத் திட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன போன்றவற்றையும் தகுந்த தரவுகளோடு ஆய்வுசெய்து உடனே ஆய்வு முடிவுகளை அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது..

பல்கலைக்கழகங்களிலிருந்து கிடைக்கக்கூடிய ஆவணக் காப்பகத் தரவுகளின் முந்தைய தீர்வுகள் சரியாக கிடைக்கப்பெற்றால் இப்போதுள்ள பிரச்சினைகளுக்கு அதிகார மட்டங்களிலிருந்து தீர்வுகளை ஒளிரச் செய்ய முடியும்''

இவ்வாறு பி.வி.ஆர்.சி புருஷோத்தம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x