Last Updated : 25 Apr, 2020 09:53 AM

 

Published : 25 Apr 2020 09:53 AM
Last Updated : 25 Apr 2020 09:53 AM

லாக் டவுனில் மேலும் சில கடைகளைத் திறக்க அனுமதி: சலூன் கடைகள் செயல்படலாமா? எவை திறக்கப்பட கூடாது? உள்துறை அமைச்சகம் நள்ளிரவில் புதிய உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 2-ம் கட்ட லாக்டவுன் காலத்தில் கூடுதலாக என்னென்ன கடைகளைத் திறக்கலாம், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர்த்து எந்தக் கடைகளைத் திறக்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நள்ளிரவில் உத்தரவு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். முதல்கட்ட லாக் டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தனர்.

அதன்பின் 2-வது கட்டமாக லாக் டவுன் கடந்த 15-ம் தேதி முதல் வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 20-ம் தேதிக்குப் பின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரச் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. சரக்கு லாரிப் போக்குவரத்து, வேளாண் பணிகள், மீன்பிடித் தொழில், சுயதொழில்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாணவர்களுக்கான பாடப் புத்தகக் கடைகள், மாவு அரைக்கும் மில்கள், மின்விசிறி விற்பனை செய்யும் எலக்ட்ரிக்கல் ஸ்டோர், மொபைல் ரீசார்ஜ் கடைகள், பால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகியவற்றைத் திறக்கலாம் எனத் தெரிவித்தது.

இந்நிலையில் 3-வது கட்டமாக பல்வேறு கடைகளை இன்று முதல் செயல்பட அனுமதியளித்து நேற்று நள்ளிரவு உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

  • இதன்படி மாநில அரசு, யூனியன் பிரதேசதங்களில் கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தில் பதிவு செய்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகள், மாநகராட்சி எல்லைக்கு வெளியே இருக்கும் கடைகள்.
  • நகராட்சியில் உள்ள கடைகள் திறக்க அனுமதி. இங்கு ஊழியர்கள் 50 சதவீதத்துக்கும் குறைவாக பணியில் வைக்கலாம். சமூக விலகலைத் தீவிரமாகக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் இருக்கும் சில்லறை விற்பனைக் மளிகைக் கடைகள், குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஷாப்பிங் மால் அல்லாத சிறிய கடைகள் போன்றவற்றைத் திறக்கலாம்.
  • மாநகராட்சி, நகராட்சிக்கு எல்லைக்கு அப்பால் பதிவு செய்யப்பட்ட சந்தைகளுக்குள் இருக்கும் கடைகளைத் திறக்க அனுமதி. இந்தக் கடைகளில் 50 சதவீதம் பணியாட்களை வைத்துக் கொள்ளலாம், முகக்கவசம் அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் சலூன்கள் (முடி திருத்தகம்), அழகு நிலையம் ஆகியவை சனிக்கிழமை முதல் செயல்படலாம்.
  • கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் அனைத்து விதமான சந்தைகளும் செயல்பட அனுமதி.
  • நகர்ப்புறங்களில் அத்தியாவசியமில்லாத பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்படலாம்.
  • அந்தக் கடைகளில் பொருட்களை விற்கவும், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவும் அனுமதி உண்டு.
  • கிராமப்புறங்களில் அத்தியாவசியமில்லாத சேவைகளை அனைத்துக் கடைகளிலும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
  • மாநகராட்சி, நகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் இருக்கும் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் கடைகளைத் திறக்கலாம்.
  • வீடுகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் சிறிய கடைகள், பலசரக்கு, சிறு கடைகள் என அனைத்துவிதமான கடைகளைத் திறக்க அனுமதி.

எவை திறக்க அனுமதியில்லை?

  • நகராட்சி, மாநகராட்சி எல்லைக்கு வெளியே செயல்படும் மல்டி பிராண்ட், சிங்கிள் பிராண்ட் கடைகளைத் திறக்க அனுமதியில்லை.
  • நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் மார்க்கெட் காம்ப்ளக்ஸ், ஷாப்பிங் மால்கள் செயல்பட அனுமதியில்லை.
  • சினிமா தியேட்டர், மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்கா, மதுபார், திறந்தவெளி அரங்கம், கூட்ட அரங்கு போன்றவை தொடர்ந்து மூடப்பட வேண்டும்.
  • மிகப்பெரிய கடைகள், குறிப்பிட்ட பிராண்ட் கடைகள், சந்தைகள் போன்றவற்றுக்கு அனுமதியில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x