Published : 25 Apr 2020 08:01 AM
Last Updated : 25 Apr 2020 08:01 AM

ராஜஸ்தானில் உணவு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளை அடித்த வெளிமாநிலத் தொழிலாளர்கள்

உணவு, உறைவிடம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தாங்கள் தங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஊதியம் ஏதுமின்றி வெள்ளை அடித்துக் கொடுத்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஊரடங்கால் வேலை இழந்துள்ள லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள், அந்தந்த மாநிலங்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் முதலியற்றை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் மாவட்டத்தில் உள்ள பல்சானா கிராமத்தில் 2 அரசுப் பள்ளிகளில் 54 வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப்பொருட்கள் ஆகியவற்றை அந்தகிராம நிர்வாகமே வழங்கி வருகிறது. இதுதவிர, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களும் அவர்களுக்கு தேவையான சிற்றுண்டிகள், தேநீர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தங்களுக்கு இத்தனை உதவிகளை செய்யும் அந்த கிராமத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தாங்கள் தங்கியிருக்கும் பள்ளிகளை சுத்தம் செய்து வெள்ளை அடிக்க அவர்கள் முடிவு செய்தனர்.

தங்களின் இந்த யோசனையை கிராம நிர்வாகத் தலைவரிடம் தெரிவிக்க, அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, கிராம நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட பெயின்ட் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு, அந்த 2 பள்ளிகளுக்கும் அவர்கள் வெள்ளை அடித்து அவற்றை புத்தம் புதிதாக மாற்றியுள்ளனர். ஆனால், இதற்காக அவர்கள் ஊதியம் ஏதும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.

இதுகுறித்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் சங்கர் சிங் கூறும்போது, ‘‘கிராம மக்கள் எங்களை அவர்களின் குடும்பத்தினரில் ஒருவராகவே கருதி உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களின் அன்புக்கு பிரதிபலனாக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. அதற்காகத்தான், இந்தப் பள்ளிகளை புதுப்பித்துள்ளோம். இது, மாணவர்களுக்கு நல்ல சூழலில் கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்கும்’’ என்றார். ராஜஸ்தான் மாநிலம், பல்சானா கிராமத்தில் 2 அரசுப் பள்ளிகளில் 54 வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x