

டெல்லியில் முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த சில நாட்களில் டெல்லிலோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில், சோதனை அடிப்படையில் 4 கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் முடிவுகள் ஊக்கமளிப்பவையாக உள்ளன. அந்த4 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருந்து மீண்டவர். 2 பேர் மருத்துவமனையில் இருந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.
கரோனா வைரஸ் பாதித்த மேலும் சிலருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய உள்ளோம். அதில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொருத்து கரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்டோருக்கு அதிக அளவில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள, மத்தியஅரசிடம் அனுமதி கோருவோம்.கரோனாவில் இருந்து மீண்டவர்கள் தங்கள் பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வந்தால்தான் மேற்கொண்டு பலருக்கு சிகிச்சையை தொடர முடியும். எனவே,குணமடைந்தவர்கள் தங்கள் பிளாஸ்மாவை தானமாக தர முன்வர வேண்டும். அது உண்மையான நாட்டுப்பற்று கொண்ட நடவடிக்கையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.