

கரோனா தாக்குதல் வேகமாக இரட்டிப்பாகும் பகுதிகள், மரண விகிதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் மீது மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் அத்துறையின் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது கரோனா சூழ்நிலையைக் கையாளுதலில் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் தேவைகளை சமாளிக்க ஆயத்தநிலை குறித்து அவர் ஆய்வு செய்தார்.
இதுவரை மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், அதிக அளவில் நோய்த் தாக்குதல் கண்டறியப்படும் அல்லது நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக இரட்டிப்பாகும் மாவட்டங்கள் குறித்தும், மரண விகிதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கண்காணிப்பு, வீடு வீடாகச் சென்று நோய் பாதிப்பைக் கண்டறிதல், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பைக் கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் நோயாளிகளுக்கு உரிய காலத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை மூலம் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தினார்.
டாக்டர்கள் மற்றும் முன்கள சுகாதாரத் துறைப் பணியாளர்கள், கோவிட்-19 பாதிப்பு உள்ள அல்லது பாதிப்பு ஏற்பட்டு குணமான நோயாளிகளை தயக்கத்துடன் அணுகுதல் மற்றும் பாரபட்சமாக நடத்துதல் போன்றவை இல்லாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.