Last Updated : 24 Apr, 2020 05:25 PM

 

Published : 24 Apr 2020 05:25 PM
Last Updated : 24 Apr 2020 05:25 PM

அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது மனிதநேயமற்றது; புதிய நாடாளுமன்றம் கட்டுவதை நிறுத்துங்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் 

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி, டிஆர் உயர்வை 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை மத்திய அரசு நிறுத்தியது மனிதநேயமற்றது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி, டிஆர் உயர்வு 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை நிதியமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியானது.

2021-22 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் டிஏ, டிஆர் ஆகியவற்றுக்காக மொத்தம் ரூ.37,530 செலவிட வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசின் டிஏ, டிஆர் முறையையே பின்பற்றி வருகின்றன. மாநில அரசுகளும் இந்த உயர்வை நிறுத்தினால் ரூ.82,566 கோடி சேமிக்க முடியும். மத்திய அரசு, மாநில அரசுகளும் இந்த உயர்வை நிறுத்துவதன் மூலம் ரூ.1.20 லட்சம் கோடி சேமிக்க முடியும். கரோனாவுக்கு எதிரான போரில் இன்னும் வேகமாகச் செயல்பட முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், படைவீரர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்த மத்திய அரசின் செயல் மனிதநேயமற்றது. உணர்ச்சியற்ற செயல். கரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தச் செயலை அரசு செய்துள்ளது.

இதற்குப் பதிலாக புல்லட் ரயில் திட்டம், நாடாளுமன்றத்தை அழகுபடுத்தும் திட்டத்துக்கு லட்சம் கோடிகளில் ஒதுக்கியுள்ளதே மத்திய அரசு அந்த செலவை நிறுத்தலாமே” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆன்லைன் மூலம் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்தில், “மத்திய அரசு தனது சொந்தச் செலவிலிருந்து 30 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ளலாம். புல்லட் ரயில் திட்டம், நாடாளுமன்றம் அழகுபடுத்தும் திட்டம் ஆகியவற்றைக் குறைத்து அந்தப் பணத்தை கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடச் செலவிடலாம்.

இந்த இக்கட்டான நேரத்தில் ஏழை மக்களுக்கு நிதியளித்து உதவி செய்வதற்குப் பதிலாக அவர்களை வேதனைப்படுத்துகிறது. தனது சொந்தச் செலவுகளை குறைப்பதற்குப் பதிலாக, நடுத்தர மக்களின் பணத்தில் கை வைத்துக் குறைக்கிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x