Last Updated : 24 Apr, 2020 04:37 PM

 

Published : 24 Apr 2020 04:37 PM
Last Updated : 24 Apr 2020 04:37 PM

நெகிழவைக்கும் மனிதநேயம்: உடல்நலக் குறைவால் இறந்த வீட்டின் பணிப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்த கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர் : கோப்புப்படம்

புதுடெல்லி

தனது வீட்டில் பணிபுரிந்த பெண் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்ததால் ஊரடங்கு காரணமாக அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லமுடியவில்லை. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தானே இறுதிச்சடங்கு செய்து அப்பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்தார்

கவுதம் கம்பீரின் இந்த மனிதநேயம் மிக்க செயலுக்கு ட்விட்டரி்ல பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏராளமானோரும் கவுதம் கம்பீர் செயல் குறித்துப் புகழாரம் சூட்டுகின்றனர்.

கவுதம் கம்பீர் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தவர் சரஸ்வதி பத்ரா (வயது 49). இவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரைச் சேர்ந்தவர். திருமணமான இரு ஆண்டுகளில் கணவனால் கைவிடப்பட்ட சரஸ்வதி பத்ரா, கவுதம் கம்பீரின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் வீட்டு வேலைக்குச் சென்றார்.

சரஸ்வதி பத்ராவுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு நோய் இருந்து வந்தது. இந்நிலையில் உடல்நிலை மோசமாகவே கடந்த 14-ம் தேதி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டா். சிகிச்சைக்கான அனைத்துச் செலவுகளையும் கம்பீர் கவனித்து வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 21-ம் தேதி சரஸ்வதி உயிரிழந்தார்

இதையடுத்து, ஒடிசா மாநிலம் ஜோஜ்பூர் குஸன்பூரில் கிராமத்தில் இருக்கும் சரஸ்வதியின் சகோதரர் குடும்பத்தாரிடம் கம்பீர் தகவல் தெரிவித்தார். ஆனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால், சரஸ்வதி உடலை ஒடிசாவுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அவரது குடும்பத்தினரும் டெல்லிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் சூழலை கம்பீரிடம் தெரிவித்த சரஸ்வதி குடும்பத்தினர், சரஸ்வதிக்கு இறுதிச்சடங்கை கம்பீரே செய்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். சரஸ்வதி குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கம்பீர், லாக் டவுன் சூழலைக் கருதி சரஸ்வதிக்கு தானே இறுதி்ச்சடங்கு செய்து அவர்களின் வழக்கப்படி நல்லடக்கம் செய்தார்.

கம்பீர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படம் (வீட்டுப் பணிப்பெண் சரஸ்வதி)

கவுதம் கம்பீர் தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்த செய்தி ஒடிசா நாளேடுகளில் வந்தது. இதைத் தனது ட்வி்ட்டர் பக்கத்தில் கம்பீர் பகிர்ந்துள்ளார். இதுவரை வெளியே தெரியாமல் இருந்த நிலையில் ஊடகங்களில் வந்தபின் கம்பீர் அதைப் பகிர்ந்துள்ளார்.

அதில் கம்பீர் குறிப்பிடுகையில், “என் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஒருவர் வீ்ட்டுவேலை செய்பவராக இருக்க முடியாது. எனது குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் இறுதிச்சடங்கைச் செய்வது எனது கடமை. சாதி, மதம், சமூகம் எதுவாக இருந்தாலும் நாம் மரியாதை வழங்குவதை நம்புகிறோம். மரியாதைதான் சிறந்த சமூகத்தை உருவாக்கும். இதுதான் என்னுடைய இந்தியாவின் சிந்தனை. ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.

கவுதம் கம்பீரின் செயலை ஒடிசா நாளேடுகள் வாயிலாக அறிந்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில், “ சரஸ்வதி உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது கவனித்துக்கொண்டு, அவர் இறந்தபின் லாக் டவுன் காரணமாக உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல முடியாத சூழலில் கவுரவமான முறையில் இறுதிச்சடங்கு செய்துள்ளார் கம்பீர்.

கம்பீரின் இரக்கம் மிக்க செயல் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை உயர்த்தும். வாழ்வாதாரத்திற்காக தங்கள் குடும்பத்தைப் பிரிந்து வெகு தொலைவில் உழைத்து வரும் ஏழைகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் மரியாதை பெறுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x