

யாரையும் சாராமல், தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக வேண்டும் என்பதுதான் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் இந்தியாவுக்கு கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம் என்று பிரதமர் மோடி கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தப் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு நாடு முழுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு 23 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 718 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழலில் பிரதமர் மோடி கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் காணொலி மூலம் உரையாடினார்.
மேலும், பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி இ-கிராம ஸ்வராஜ் போர்டலையும், ஸ்வாமித்வா திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது நாடு முழுவதும் கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“கரோனா வைரஸ் இந்தியாவுக்கு கற்றுக்கொடுத்த மிகப்பெரிய பாடம் நாம் எதிர்காலத்தில் யாரையும் சாராமல் சுயசார்புள்ளவர்களாக, தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற வேண்டும் என்பதுதான். கிராமங்களும் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக சுயசார்புள்ளவர்களாக மாறுவது கட்டாயமாகும்.
கிராமங்களில் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் 2 அடி இடைவெளிவிட்டு நின்று மற்றவருடன் பேச வேண்டும். இவ்வாறு மக்களிடம் தெரிவித்தால் எளிமையாகப் புரிந்து கொள்வார்கள்.
இதற்கு முன் இந்த தேசம் சந்திக்காத மிகப்பெரிய சவால்களை கரோனா வைரஸ் நம் முன் தூக்கி எறிந்துள்ளது. மக்களும் புதிய விஷயங்களைக் கற்கிறார்கள். மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்துக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் ஒழுக்கமாக நடப்பதால்தான் கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் செயல்பாட்டை உலகமே பேசுகிறது.
வழக்கமான நாட்களில் இதுபோன்ற கூட்டங்கள் நேருக்கு நேர் பேசுவது போன்று நடத்தப்படும். ஆனால் சூழல் மாற்றம் காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க காணொலி மூலம் நடத்துகிறோம். இ-கிராம ஸ்வராஜ் போர்டல் மூலம் அனைத்துத் தகவல்களையும் அறியலாம். திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் கூட தெரிந்து கொள்ளலாம். நம்முடைய நிர்வாக முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும்.
நம்மிடம் குறைவான வளங்கள் இருந்தபோதிலும் அதைச் சவாலாக எடுத்து மக்கள் தங்கள் சிரமங்களைத் தாங்கி வாழ்கிறார்கள். கரோனா வைரஸுக்கு எதிரான போரில் கிராமங்களும், கிராமப் பஞ்சாயத்துகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.