டெல்லியில் காய்கறி வண்டிக் கடைக்காரருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு; மற்ற கடைக்காரர்களை மிரட்டக் கூடாது: அதிகாரிகள் அறிவுறுத்தல்

டெல்லியில் காய்கறி வண்டிக் கடைக்காரருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு; மற்ற கடைக்காரர்களை மிரட்டக் கூடாது: அதிகாரிகள் அறிவுறுத்தல்
Updated on
1 min read

டெல்லியில் காய்கறி வண்டிக் கடைக்காரருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் காரணமாக வைத்து மற்ற வியாபாரிகளை யாரும் மிரட்டக்கூடாது என தெற்கு டெல்லி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, டெல்லியில் 2,248 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 48 பேர் பலியாகினர்.

இரு வாரங்களுக்கு முன்பு வீடு வீடாக பீட்சா டெலிவரி செய்யும் ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதனையொட்டி அவருடன் பணியாற்றிவந்த 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர் தொடர்புகொண்ட 72 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் வீதிகளில் காய்கறி வியாபாரம் செய்யும் வண்டிக் கடைக்காரர் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு டெல்லி மாவட்ட ஆட்சியர் பி.எம்.மிஸ்ரா கூறியதாவது:

''மெஹ்ராலியில் வார்டு 3 பகுதி வீதிகளில் காய்கறி வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒரு கடைக்காரர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததும் உடனடியாக காய்கறி வியாபாரம் செய்வதை நிறுத்திக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் மாற்றப்பட்ட காய்கறி மண்டியின் பகுதியைச் சேர்ந்தவரில்லை. ஏனெனில் அது டிடிசி டெர்மினலில் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள காய்கறி வியாபாரியுடனான நெருங்கியத் தொடர்புகள் சரிபார்க்கப்பட்டன. அவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போது டெர்பந்த் பவனில் ஆய்வகத்திலிருந்து அவற்றின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதனை அடுத்து அனைத்து விற்பனையாளர்களையும் சோதனை செய்து வருகிறோம். அப்படி செய்வது அனைவருக்கும் விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்கும் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுடன் மற்றவர்கள் தொடர்புகொள்வதை தடுப்பதற்காகத்தான். மற்றபடி, தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் கடை வைத்திருப்பவர்களையோ, காய்கறி வண்டிக்காரர்களையோ யாரும் துஷ்பிரயோகம் செய்யவோ மிரட்டவோ அல்லது தவறாக நடத்தவோ கூடாது''.

இவ்வாறு தெற்கு டெல்லி மாவட்ட ஆட்சியர் பி.எம்.மிஸ்ரா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in