

தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்விக்குச் சொந்தமான உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் நேற்று டெல்லி சிறப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம், கந்தாலா எனும் கிராமம் மவுலானா சாத் பிறந்த ஊராகும். அங்கு 6 பேர் கொண்ட டெல்லி சிறப்புப் படையினர் சோதனை நடத்தினர். இந்த ரெய்டு நடந்த தகவலை ஷாம்லி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வினித் ஜெய்ஸ்வால் உறுதி செய்தார்.
கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டபோது, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர்.
அங்கிருந்த பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், பலருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவின்படி தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இருமுறை நேரில் ஆஜராக மவுலானா சாத் கந்தால்விக்கு போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் ஷாம்லி மாவட்டம், கந்தாலா எனும் கிராமத்தில் மவுலானா சாத்துக்கு சொந்தமான வீடுகளில் நேற்று போலீஸார் ரெய்டு நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஷாம்லி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வினித் ஜெய்ஸ்வால் நிருபர்களிடம் கூறுகையில், “டெல்லி போலீஸின் 5 சிறப்பு அதிகாரிகள் ஓட்டுநர் உள்பட 6 பேர் நேற்று கந்தாலா கிராமத்துக்குச் சென்றனர். அவர்கள் வருகை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டு தேவையான உதவி அளிக்கப்பட்டது. கந்தால்வியின் பண்ணை வீடுகளில் டெல்லி போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர். என்ன கேள்வி கேட்டனர் என்பது தெரியாது” எனத் தெரிவித்தார்.