Last Updated : 24 Apr, 2020 11:12 AM

 

Published : 24 Apr 2020 11:12 AM
Last Updated : 24 Apr 2020 11:12 AM

கேரளாவில் துயரம்: கரோனாவால் 4 மாத பச்சிளங்குழந்தை உயிரிழப்பு

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 4 மாத பச்சிளங்குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

கடந்த இரு தினங்களுக்கு முன் சண்டிகரில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த நிலையில் கேரளாவில் இந்த சோகம் நடந்துள்ளது.

இதன் மூலம் கேரளாவில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் இதுவரை 447 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 324 பேர் குணமடைந்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைப் பகுதியைச் சேர்ந்த இந்தக் குழந்தை கடந்த 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை உடல்நலக் குறைவாலும், சுவாசக் குறைவாலும் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது. ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காததையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை மலப்புரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரத்தப் பரிசோதனையில் அந்தக் குழந்தை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை புதன்கிழமை அறிந்தனர். இந்தக் குழந்தைக்கு எவ்வாறு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை பெற்றோர்களாலும் விவிரிக்க முடியவில்லை, வெளிநாட்டுக்கும் பெற்றோர் சென்றதில்லை.

அந்தக் குழந்தையின் தூரத்து உறவினர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நேரடியாக அந்தக் குழந்தையோடு அந்த நபருக்குத் தொடர்பில்லை என பெற்றோர் தெரிவித்தனர். கடந்த இரு நாட்களாக அந்தப் பச்சிளங்குழந்தைக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அந்தக் குழந்தை உயிரிழந்தது.

கரோனா வைரஸ் பாதிப்பால்தான் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்தது. மேலும் அந்தக் குழந்தைக்கு இதய நோய் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்ததாக என்று மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x