

பிரதமர் மோடியை உலகமே பாராட்டுகிறது, ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைசசர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
‘‘கரோனா தொற்றுநோயைக் கையாளும் விதம், இந்தியர்களை உரியமுறையில் கவனித்துக்கொள்வது இதுபோன்ற சவாலான காலங்களில் உலக சமூகத்திற்கு உதவுவது போன்ற செயல்பாட்டுக்காக பிரதமர் மோடியை உலகமே பாராட்டுகிறது. ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பாக உணர்கிறார்கள், அவருடைய தலைமையை நம்புகிறார்கள்’’ எனக் கூறியுள்ளார்.