

ராஜஸ்தான் மாநில 3-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் துறவிகள் பற்றிய அத்தியாயத்தில் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அசாரம் பாபு பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.
அதாவது அன்னை தெரசா, விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள இடத்தை ‘பாலியல் புகார்’ அசாரம் பாபுவும் பெற்றுள்ளார்.
பொது அறிவு மற்றும் நீதிபோதனைக் கல்வி பாடப்புத்தகத்தில் யோகா குரு ராம்தேவும் துறவிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள அசாராம் பாபு ஜோத்பூர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
பாடப் புத்தகத்தின் இதே அத்தியாயத்தில் குருநாணக், கபீர், மீராபாய், சங்கராச்சாரியார் ஆகியோரது படங்களும் உள்ளது. தற்போது குழந்தைகள் இவர்கள் மட்டத்தில் அசாராம் பாபுவையும் வைத்து பார்க்க பழக்கப் படுத்தப்படுகின்றனர்.
இந்த பாடப்புத்தகத்தை வழங்கியவர்கள் டெல்லியைச் சேர்ந்த குருகுலம் புக்ஸ் ஆகும்.
அசாரம் பாபுவின் பெயரை சேர்த்தது பற்றி புத்தகப் பதிப்பாளரிடம் கேட்ட போது, அதன் பிரதிநிதி, இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட போது அசாராம் பாபு மீது எந்த வித புகார்களும் இல்லை என்றார்.
“இப்போது அந்தப் புத்தகத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறோம், அசாராம் இல்லாத புதிய பதிப்பு வெளியிடப்படவுள்ளது என்று அவர் மேலும் கேட்ட போது தெரிவித்தார்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.
16 வயது சிறுமி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் அசாராம் பாபு ஆகஸ்ட் 2013 முதல் ஜோத்பூர் சிறையில் காலம் தள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.