

டெல்லி மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் குணமடைந்து முகாம் வந்த தமிழர் ஒருவர் இரு தினங்களில் உயிரிழந்தார். டெல்லியில் நேற்று நடந்த இந்த சம்பவத்துக்கு உணவு மற்றும் சுகாதார சீர்கேடு காரணம் என அவருடன் தங்கியிருந்த சக ஜமாத்தினர் புகார் கூறியுள்ளனர்.
தப்லீக் ஜமாத் கூட்டத்துக்கு டெல்லிக்கு வந்தவர்களில் கோயம்புத்தூர், பிருந்தாவன் சர்கிலில் உள்ள குனியமுத்தூரை சேர்ந்த முகம்மது முஸ்தபா (60) என்பவரும் ஒருவர். தமிழக அரசின் சிப்காட்டில் பொறியாளராகப் பணியாற்றிய இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். நீரிழிவு நோயாளியான அவரும் தப்லீக் ஜமாத் கூட்டத்துக்கு வந்திருந்தார்.
இவர், கரோனா தொற்று சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சிறப்பு வசதி அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் 29-ல் அனுமதிக்கப்பட்டார். இதில் குணமடைந்த இவர், ஏப்ரல் 19-ல்டெல்லியின் சுல்தான்புரி முகாமில்சேர்க்கப்பட்டார். இங்கு ஐந்தாவதுமாடியில் தங்கியிருந்த முஸ்தபாவுக்கு, மூன்றாவது நாளான நேற்றுதிடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அவருடன் தங்கியிருந்த மற்றொரு தமிழரான அபுபக்கர் தொலைபேசியில் கூறும்போது, ‘நாங்கள் இந்த முகாமில் மிகவும் மோசமான நிலையில் உள்ளோம். வந்த ஒருநாள் நன்றாக இருந்த முஸ்தபா, நீரிழிவு மாத்திரை கிடைக்காமலும், சுகாதார சீர்கேட்டாலும் இறந்துள்ளார். அதிகாலை 5 மணிக்கு அவர்மயக்கம் அடைந்தார். புகார் செய்தும் 11 மணி வரை மருத்துவர்கள் வரவில்லை. முஸ்தபா இறந்த நிலையில் இருப்பதை கண்டு அனைவரும் வெளியில் சென்று போராட்டம் செய்ய முயன்றோம். பிறகு எங்களை சமாதானப்படுத்தி அவருக்கு உயிர் இருப்பதாகக் கூறி எடுத்துச் சென்றனர்” என்றார்.
அதே முகாமில் உள்ள திண்டுக்கல்லை சேர்ந்த பியூமஸ் என்ற மற்றொரு தமிழர் கூறும்போது, “நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டுமாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு அவை சரியாகத் தரப்படுவதில்லை. இதுபோன்ற காரணங்களால் முதியவர் பலரின் உடல்நலம் கெடும் ஆபத்து உருவாகியுள்ளது. மூன்று வேளையும் உணவு மிகவும் தாமதமாகக் கிடைக்கிறது. எங்கள் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு, அனைவரது நலனிலும் அக்கறை காட்டி, ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்.
தமிழர் அல்லாத பிற ஜமாத் உறுப்பினர்கள் தங்கள் புகார்களை தங்கள் மாநில அதிகாரிகளிடம் கூற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி தமிழக ஜமாத்தினருக்கு கிடைக்காததால் பிரச்சினைகள் எழுவதாகக் கருதப்படுகிறது. டெல்லியில் இவர்களை தவிர தமிழகத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வந்த முஸ்லிம் அல்லாதவர்களும் குடிமைப்பணி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களும் சிக்கியுள்ளனர்.
இந்தப் புகார்கள் குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை செயலாளரான ஹிதேஷ்குமார் மக்வானா கூறும்போது, “டெல்லி,மகாராஷ்டிரா, குஜராத், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிக்கிய தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு இல்லத்தின் 011-24193466, 011-24193100 என்ற தொலைபேசி எண்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. அனைத்து மாநிலங்களில் இருந்தும் இதுவரை பெற்ற சுமார்3,500 புகார்களை சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்த்து வைத்துள்ளோம். மேற்கு வங்கத்தின் கடக்பூரில் இறந்த ஈரோட்டு தமிழர் நல்லடக்கத்தையும் நாங்களே பேசி அங்கேயே செய்தோம். முஸ்தபாவின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினருக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.