

ரேபிட் டெஸ்ட் என்பது கரோனாவை கண்கணிப்பதற்கான கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட்டின் மூலம் நோயாளிகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தால் 5.4 சதவீதம் அளவுக்கு மட்டுமே துல்லியத்தன்மை இருக்கிறது என்று ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கரோனாவைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியது.
இந்தநிலையில் கரோனாவைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ள நிலையில் சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்களின் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரேபிட் ஆன்டிபாடி பரிசோதனை செய்வதற்கான வரைமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐசிஎம்ஆர் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது.
அதன்படி, ‘‘கண்காணிப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே, பெரும்பாலும் இந்த ஆன்டிபாடி ராபிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலக அளவிலும், இந்த டெஸ்ட் பரிசோதனையின் பயன்கள் தெரிய வந்து கொண்டிருக்கின்றன. தனிநபர்களில் ஆன்டிபாடிகள் உருவாவதைக் கண்டுபிடிப்பதற்கு, இந்த பரிசோதனை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பரிசோதனையின் முடிவுகள், கள நிலைமைகளைச் சார்ந்ததாகவும் இருக்கும்.
ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளபடி, கோவிட் 19 தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை முறைக்கு மாற்றாக, இந்த சோதனையைப் பயன்படுத்தப்பட முடியாது.
ரேபிட் ஆன்டிபாடி டெஸ்டுகள், கள நிலைமைகளில் எவ்வாறு, எந்த அளவிற்கு பயன்படுத்தப்படலாம் என்பதை மதிப்பீடு செய்வதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், விவரங்களைச் சேகரிப்பதற்கான உதவிகளை அளிப்பதாக ஐசிஎம்ஆர் உறுதியளித்துள்ளது. ஐசிஎம்ஆர் மாநிலங்களுக்கு, தொடர்ந்து அறிவுரை வழங்கும். இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அவை எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமோ, அந்த நோக்கத்திற்காக மட்டுமே அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.’’இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.