Published : 22 Apr 2020 03:59 PM
Last Updated : 22 Apr 2020 03:59 PM

தரமற்ற ரேபிட் டெஸ்ட் கிட்கள்? - சீனாவின் 2 நிறுவன தயாரிப்புகள் குறித்து ஐசிஎம்ஆர் விசாரணை

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

கரோனாவைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ள நிலையில் சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்களின் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.

கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை முடிவுகள் வர நாள் கணக்கில் ஆகிறது. அதனால், அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில் பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு அதிகமானோரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். ஆனால், இது மட்டுமே இறுதியான கரோனா பரிசோதனை முடிவு இல்லை.

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மீண்டும் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை செய்யப்படும். சீனாவில் இருந்து விரைவான கரோனா பரிசோதனைக்காக வந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் சீனாவிலிருந்து தயாரித்து இந்தியா இறக்குமதி செய்த கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் தரத்தில் மிகவும் மோசமாக இருப்பதால் பயன்பாட்டை நிறுத்தியதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டின் மூலம் நோயாளிகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தால் 5.4 சதவீதம் அளவுக்கு மட்டுமே துல்லியத்தன்மை இருக்கிறது என்று ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கரோனாவைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியது.

இந்தநிலையில் கரோனாவைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ள நிலையில் சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்களின் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட 2 நிறுவனங்களில் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தரமற்றவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அதன் தரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விசாரணை நடத்தி வருகிறது. எனினும் எந்த நிறுவனம் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x