

ஊடகத்துறையில் பணிபுரியும் பல செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, செய்திசகரிப்பின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் ஈடுபட வேண்டும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தகுந்த பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது
ஊடகத்துறையில் பணியாற்றும் நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் ஆகியோர் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நாட்களில் தீவிரமான செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களி்ல் பணியாற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களில பலர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மும்பையில் மட்டும் 53 பத்திரிகையாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, உத்தரப்பிரதேசம், கர்நாடகம் டெல்லி அரசு ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு கரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளன. ஊடகத்துறையினர் கரோனாவில் பாதிக்கப்பட்டது குறித்து மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து, மத்திய தகவல்தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு நேரத்திலும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு அச்சு ஊடகம், காட்சி ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன.
கரோனா ஹாட்ஸ்பாட், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள், கரோனாபாதிப்பு இடங்களுக்கு ஊடகப்பிரிவினர் செய்தி சேகரிக்கச் செல்லும் போது, தகுந்த முன்னெச்சரிக்கையுடன், முகக்கவசத்துடன் ெசல்ல வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
அதேபோல ஊடகங்களை நிர்வகித்து நடத்தும் நிறுவனங்களும் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் நலனில் தேவையான அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்ளுமாறு நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது