26/11 மும்பை தாக்குதல் பாகிஸ்தானில்தான் திட்டமிடப்பட்டது: பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஒப்புதல்

26/11 மும்பை தாக்குதல் பாகிஸ்தானில்தான் திட்டமிடப்பட்டது: பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஒப்புதல்
Updated on
2 min read

“கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, மும்பையில் 166 பேரை பலி கொண்ட தாக்குதல் சம்பவம், பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு, ஏவப்பட்டது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சிந்து மாநிலத்தில் பயிற்சி பெற்றார்கள்” என்று பாகிஸ்தானின் தேசிய புலானாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ. முன்னாள் இயக்குநர் தாரிக் கோசா ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த 2008 ம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுரு வினர். இவர்கள் மும்பையின் பல்வேறு இடங்களில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் 166 பேரை கொன்று குவித்தனர். உலகை அதிரச் செய்த இத்தாக்குதல் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அளவுக்கு பதற்றத்தை ஏற் படுத்தியது.

இத்தீவிரவாதிகளில் 9 பேர் பாது காப்பு படையினரால் கொல்லப் பட்டனர். அஜ்மல் கசாப் என்பவர் மட்டும் பிடிபட்டார். பின்னர் இவர் தூக்கிலிடப்பட்டார். தீவிரவாதி களுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பாகிஸ் தான் முதலில் மறுத்தது. பின்னர் அஜ்மல் கசாப் மற்றும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என ஒப்புக்கொண்டது. என்றாலும் இத்தாக்குதலில் தொடர்புடையவர் களை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்து விட்டது. தங்கள் நாட்டிலேயே விசாரணை நடத்தி தண்டிப்பதாக கூறி வருகிறது. என்றாலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கில் தீவிரம் காட்ட மறுத்து வருகிறது.

இந்நிலையில் எப்.ஐ.ஏ. (Federal Investigation Agency) முன்னாள் இயக்குநர் தாரிக் கோசா எழுதிய கட்டுரை பாகிஸ்தானின் டான் நாளேட் டில் வெளியாகியுள்ளது. இதில் தாரிக் கோசா கூறியிருப்பதாவது:

மும்பை தாக்குதல் தனது மண்ணில் திட்டமிடப்பட்டு, ஏவப் பட்டது என்ற அடிப்படையில் பாகிஸ் தான் இதனை அணுகவேண்டும். இத்தாக்குதலை நடத்தியவர்கள், இதற்கு மூளையாக செயல்பட்ட வர்கள் நீதியின் முன் நிறுத்தப்படு வதை நாட்டின் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த வழக்கு நீண்ட கால மாக சுணக்கமாக நடந்து வருகிறது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் லஷ்கர் இ தாய்பா தீவிரவாதிகளுக்கு சிந்து மாநிலத்தின் தாட்டா என்ற இடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கிருந்து கடல் மார்க்கமாக அவர்கள் ஏவப்பட்டனர். இந்த பயிற்சி மையத்துக்கான இடம் அதிகாரி களால் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

மும்பை தாக்குதலில் பயன் படுத்தப்பட்ட ஆயுதங்களும் பயிற்சி முகாமில் உள்ள ஆயுதங்களும் ஒத்துப் போகின்றன. நடுக்கடலில் இந்திய மீனவர் ஒருவரை கொன்று விட்டு அவரது படகு மூலம் தீவிர வாதிகள் முன்பை சென்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் நடுக் கடலுக்கு செல்ல பயன்படுத்திய படகு மீண்டும் பாகிஸ்தான் துறைமுகம் கொண்டு வரப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டது.

கராச்சியில் இருந்து கட்டுப் பாட்டு அறை மூலம் தாக்குதல் வழிநடத்தப்பட்டது. இதற்கான இடத் தையும் அதிகாரிகள் கண்டறிந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

மும்பை தாக்குதல் சம்பவம் தனித்தன்மை வாய்ந்தது. இதற்கான சதியை வெவ்வேறு நாட்டு (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) நீதிமன்றங் களில் நிரூபிப்பது சிக்கலானது. எனவே இந்த வழக்கு விசார ணையில் பாகிஸ்தானும் இந்தி யாவும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து, இரு நாடு களின் சட்ட நிபுணர்களும் அமர்ந்து பேசவேண்டும்.

பாகிஸ்தானிய தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி அளித்த தனது தவறை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வாறு தாரிக் கோசா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in