Last Updated : 22 Apr, 2020 02:12 PM

 

Published : 22 Apr 2020 02:12 PM
Last Updated : 22 Apr 2020 02:12 PM

தீவிரவாதி பட்டம் கட்டாதீர்கள்; எங்கள் பணி என்ன என்பது அனைவருக்கும் தெரியும்: தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் முதல் முறையாக பேட்டி

மவுலானா சாத் கந்தால்வி: கோப்புப்படம்

புதுடெல்லி

எங்கள் அமைப்பின் மீது தீவிரவாதப் பழி சுமத்தாதீர்கள். நாங்கள் யார், எங்கள் பணி என்பது அனைவருக்கும் தெரியும். வன்முறைக்கே நாங்கள் எதிரானவர்கள் என்று டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர்.

இதையடுத்து அவர்களை போலீஸார், சுகாதாரத்துறையினர் அப்புறப்படுத்திய நிலையில் அங்கிருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினர். இதில் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், பலருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி இருந்ததும் தெரியவந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் பங்கேற்று இருந்தனர்.

ஆனால், மார்ச் முதல் வாரத்தில் இருந்து நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் 9 ஆயிரம் பேர் பங்கேற்று தங்கள் மாநிலங்களுக்குச் சென்றதாகத் தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அவரின் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 31-ம் தேதி நிஜாமுதீன் பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இருமுறை நேரில் ஆஜராக மவுலானா சாத் கந்தால்விக்கு போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு முதல் முறையாக மவுலானா சாத் கந்தால்வி பேட்டி அளித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறதே?

தப்லீக் ஜமாத் அமைப்பை லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பின்பற்றுகிறார்கள். நாங்கள் எந்தவிதமான கூட்டம் நடத்தினாலும் அதை இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்புகளுக்கு தெரியாமல் நடத்த முடியாது. அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பித்துச் செயல்பட முடியாது. முழுமையாக விசாரணை நடத்துவார்கள்.

உங்கள் கருத்துப்படி அவ்வாறு நாங்கள் தீவிரவாதத்தோடு தொடர்பில் இருந்தால், அதிகாரிகள் மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். விசாரணை அமைப்புகளும் வேகமாகச் செயல்பட்டிருக்கும். தப்லீக் ஜமாத் அமைப்பும், வன்முறையும் நேர் எதிரானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற கேள்வி வைக்கப்பட்டதே முதல் தவறு. நம் நாட்டின் உளவுத்துறை, புலனாய்வுப் பிரிவு அமைப்புகளின் திறமை மீது சந்தேகப்பட்டு குறைத்து மதிப்பிட்டது இரண்டாவது தவறு. எங்கள் தப்லீக் ஜமாத் அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேலான பழமையும் பாரம்பரியமும் கொண்டது. எங்கள் பணி என்ன, நாங்கள் என்ன செய்கிறோம் என்பது புலனாய்வு அமைப்புகளுக்கும், விசாரணை முகமைகளுக்கும் நன்கு தெரியும்.

எங்கள் அமைப்பில் இருப்பவர்கள் யாரும் அரசியலில் ஈடுபடமாட்டார்கள். எந்தவிதமான இயக்கத்திலும் இருக்கமாட்டார்கள். ஜமாத் என்பது, இறைத்தூதர் முகமது நபியை உதாரணமாக வைத்துச் செயல்படுவது. அனைத்துப் பிரிவினரின் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று அவர் காட்டியதை செய்தியாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறோம்.

நாங்கள் செயல்படும் விதம், பணி அனைத்தையும் பாதுகாப்பு முகமைகள் நன்று அறியும். எங்கள் அமைப்பின் மீது மிகுந்த மரியாதையும் வைத்துள்ளனர். ஆனால், நாளேடுகளும், ஊடகங்களும்தான் அவர்களுக்குத் தோன்றியவற்றை எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.

நாங்கள் எப்போதும் அதிகாரிகளுக்கு ஒத்துழைத்துதான் செல்கிறோம். எந்த நேரத்தில் கேள்வி எழுப்பினாலும் நாங்கள் பதில் சொல்கிறோம். எழுத்தாளர்கள், கருத்துசொல்பவர்கள் தாராளமாக எங்களைப் பற்றிப் பேச கருத்து கூற உரிமை உண்டு. சமூக்தில் பல்வேறு மாற்றங்கள் நடக்கவும், மக்களை முன்னேற்றவும் நாங்கள் செய்த பணிகளை வரலாறு மறைக்காது என்பதில் நம்பிக்கை இருக்கிறது’’.

இவ்வாறு மவுலானா சாத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x