

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் ஒரு மாதமாக மறைந்திருந்த 30 ஜமாத்தினர் நேற்று மாலை சிக்கினர். இதில் இடம்பெற்ற ஒரு பேராசிரியர், 16 வெளிநாட்டவர் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.
உ.பி.யின் அலகாபாத்தின் ஷாகன்ச் பகுதியில் அப்துல்லா மசூதி மற்றும் கரேலியின் ஹீரா மசூதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்மாவட்டக் காவல்துறை அங்கு நேரில் சென்று 30 பேரையும் வெளியேற்றி அழைத்து வந்தது.
இவர்களில் பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் பல்கலைகழகத்தின் பேராசிரியரான முகம்மது ஷாஹீத்தும் தங்கியிருந்தார். இவருடன் இந்தோனேசியாவைச் சேர்ந்த 7 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 9 பேர், மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநிலங்களில் தலா ஒருவர் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’இணையத்திடம் அலகாபாத் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரான சத்யார்த் அனிரோத் பங்கஜ், ''இதில் வெளிநாட்டவர் அனுமதியின்றி அலகாபாத் வந்ததுடன், விசா விதிமுறைகளையும் மீறியுள்ளனர். மீதமுள்ளவர்கள் அரசு அறிவிப்பிற்குப் பின்பும் தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்யவில்லை'' எனத் தெரிவித்தார்.
அனைவர் மீது ஷாகன்ச் மற்றும் கரோலி காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன. இத்துடன் மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டு உகந்த இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளில் பரவிய கரோனா வைரஸ் பல உயிர்களைப் பலி வாங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தியாவிலும் ஊரடங்கு அமலாகி வருகிறது. இதையும் மீறிப் பரவும் கரோனாவிற்கு டெல்லியில் கூடிய மாநாடும் காரணம் எனக் கருதப்படுகிறது. இதற்காக கரோனா வைரஸ் பாதிப்புடன் வந்த சில வெளிநாட்டவரால் இந்தியாவின் பாதிப்பு கூடியது.
இதனால், நாடு முழுவதிலும் தங்கியிருக்கும் ஜமாத்தினரிடம் தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டப்பட்டது. எனினும், மாநாட்டில் இருந்து திரும்பியவர்களில் இன்னும் கூட அரசு முன் மருத்துவப் பரிசோதனைக்கு வராதது சிக்கலை நீட்டிக்கச் செய்து வருகிறது.