

நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தாங்கள் இருக்கும் வாடகை குடியிருப்பில் இருந்து காலிசெய்ய வேண்டும் என்றுஉரிமையாளர்கள் வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகிஉள்ளன.
இந்நிலையில், எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர்ரந்தீப் குலேரியா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில்மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர்களால் கரோனாவைரஸ் பரவுவதாக மக்களிடம்தவறான அச்சம் நிலவுகிறது. அவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் சிகிச்சை அளிக்கின்றனர்.
அவர்கள் அணிந்திருக்கும் கவச உடைகளை களையவே 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். அவர்கள் மூலம் வைரஸ் பரவாது. எனவே, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம்.
கரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த வீடியோ பதிவில் டாக்டர் குலேரியா கேட்டுக் கொண்டுள்ளார்.