தெலங்கானாவிலிருந்து சொந்த ஊர் நோக்கி 3 நாள் நடந்த 12 வயது சிறுமி மரணம்

தெலங்கானாவிலிருந்து சொந்த ஊர் நோக்கி 3 நாள் நடந்த 12 வயது சிறுமி மரணம்
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட ஒரு குழுவினர் தெலங்கானாவில் மிளகாய் வயல்களில் வேலை பார்த்து வந்தனர். ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடங்கியதால், இக்குழுவினர் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த 15-ம் தேதி நடை பயணமாக புறப்பட்டனர்.

நெடுஞ்சாலையில் செல்வதை தவிர்த்த இவர்கள் வனப் பகுதி வழியே சுமார் 150 கி.மீ. தூரம் பயணம் செய்தனர். சொந்த ஊரை அடைய 14 கி.மீட்டர் தூரம் மட்டுமே இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஜம்லோ என்ற 12 வயது சிறுமிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாள்.

இதுகுறித்து பீஜப்பூர் மாவட்ட முதுநிலை மருத்துவ அதிகாரி பி.ஆர்.பூஜாரி கூறும்போது, “நடை பயணத்தில் அச்சிறுமி நீர்ச்சத்தை இழந்துவிட்டாள். ஊட்டச்சத்து குறைபாடும் அவளுக்கு இருந்தது. கரோனா வைரஸ் தொற்று எதுவும் இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது” என்றார்.

சிறுமியின் குடும்பத்துக்கு சத்தீஸ்கர் அரசு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in