தரம் குறைந்த சீன ரேபிட் டெஸ்ட் கிட்: துல்லியத்தன்மை இல்லாததால்  பரிசோதனையை நிறுத்தியது ராஜஸ்தான்; விவரம் என்ன?

தரம் குறைந்த சீன ரேபிட் டெஸ்ட் கிட்: துல்லியத்தன்மை இல்லாததால்  பரிசோதனையை நிறுத்தியது ராஜஸ்தான்; விவரம் என்ன?
Updated on
1 min read


சீனாவிலிருந்து தயாரித்து இந்தியா இறக்குமதி செய்த கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் தரத்தில் மிகவும் மோசமாக இருப்பதால் பயன்பாட்டை நிறுத்தியதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டின் மூலம் நோயாளிகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தால் 5.4 சதவீதம் அளவுக்கு மட்டுமே துல்லியத்தன்மை இருக்கிறது என்று ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா நிருபர்களிடம் கூறுகையில், “இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலிடமிருந்து 30 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்தன. அவை அனைத்தும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. கரோனா நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்தால்கூட நெகடிவ் என்று காண்பிக்கிறது. இந்தப் பரிசோதனைக் கருவியின் துல்லியத்தன்மை என்பது 5.4 சதவீதம் மட்டும்தான்.

இந்தக் கருவியின் துல்லியத்தன்மை, தரமின்மை குறித்து நாங்கள் ஐசிஎம்ஆருக்குத் தெரிவித்துள்ளோம். எங்கள் மாநில மருத்துவக் குழுவின் பரிந்துரையின்படி அந்தக் கருவியால் பரிசோதனை செய்வதை நிறுத்திவிட்டோம். அந்தக் கருவிகள் அனைத்தையும் திருப்பி அனுப்புகிறோம்.

இதுவரை அந்தக் கருவியால் 168 பரிசோதனைகள் செய்தோம். அதில் பிசிஆர் டெஸ்ட்டில் கரோனா பாசிட்டிவ் என்று தெரிந்தவருந்கு சீனாவிலிருந்து வந்த ரேபிட் கிட்டில் பரிசோதித்தால் நெகடிவ் என்று வருவது வியப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், “ரேபிட் டெஸ்ட் கிட் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. ஐசிஎம்ஆரிலிருந்து 30 ஆயிரம் கிட் இலவசமாக வழங்கப்பட்டது. 10 ஆயிரம் கருவிகளை மாநில அரசு விலைக்கு வாங்கியது. இப்போது சீனக் கருவியிலிருந்து முடிவுகள் தவறாக இருப்பதால் மாநில அரசு சார்பில் வாங்கிய கருவி மூலம் பரிசோதிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in