

கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சென்னை மருத்துவர் இறுதிச்சடங்கில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதை இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை அரசு தடுக்காவிட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் நிபுணரின் உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் நேற்று முன்தினம் எடுத்துச் சென்றனர்.
அப்போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், உடலை வேறு ஒரு மயானத்துக்கு எடுத்துச் செல்ல முற்பட்டபோது, அவரது உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், அரசு ஊழியர்களும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல... கரோனா ஒழிப்புப் பணியில் இருக்கும் பல மாநிலங்களில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, எச்சில் துப்புவது போன்ற அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கண்டனம் தெரிவித்தது.
அதன் தலைவர் ராஜன் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
''கரோனா வைரஸ் ஒழிப்புப் பணியில் இருந்த மருத்துவர் மரணமடைந்தார். அவரின் உடலைப் புதைக்கச் சென்றபோது அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது ஆழ்ந்த கவலையளிக்கிறது. இது நாகரிகமற்ற சமூகம் செய்யும் பழக்கமாகும். இதுபோன்ற தாக்குதல்களை மாநில அரசு தடுக்க அதிகாரம் இல்லாவிட்டால், அவர்கள் ஆட்சியில் இருப்பதற்கான தார்மீக உரிமையை இழந்ததாக அர்த்தம்.
கரோனா வைரஸ் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது ஆத்திரமூட்டும் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. எங்களின் பொறுமை எல்லை கடந்தது அல்ல. மருத்துவர்களை அவதூறாகப் பேசுவது, தாக்குவது, முகத்தில் எச்சில் துப்புதல், கல்லெறிதல், சமூகத்தில் நுழையவிடாமல் தடுத்தல், குடியிருப்பில் நுழையவிடாமல் தடுத்தல் போன்றவற்றைத் தாங்கி வருகிறோம். இந்தச் சம்பவங்களை எல்லாம் அறியும் அரசுகள் தங்கள் கடமையைச் செய்யும் என எதிர்பார்த்தோம்.
இதுபோன்ற அசாதாரண சூழலிலும் தங்களின் அரசியலமைப்புக் கடமையைச் செய்ய அரசுகள் தவறலாம். ஆனால், மரணத்தில் கூட ஒருவருக்கு இறுதி மரியாதை அளிக்கவிடாமல் தடுத்தல் என்பது தர்மத்தை மீறும் உச்சகட்ட அவச்செயல். இதுபோன்ற அசாதாரண சூழலில் மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்கிறார்கள் என்பதை சமூகம் உணர வேண்டும். எந்த நாடும் தனது ராணுவ வீரர்களைப் போருக்கு ஆயுதம் இன்றி அனுப்புவதில்லை.
கரோனா வைரஸுக்கு எதிராக மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரப் பணியாளர்களும் பிபிஇ கிட் இன்றி பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு அவர்கள் உயிரை இழக்கிறார்கள். அவர்களின் சேவையின் மதிப்பை உணராவிட்டால், மருத்துவர்கள் சமூகம் மிகவும் எளிதாக மற்றவர்களைப்ப போல் வீட்டில் அமர்ந்து கொள்வார்கள்''.
இவ்வாறு சர்மா தெரிவித்தார்.
இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆர்.வி.அசோகன் கூறுகையில், ''மருத்துவர்களின் உரிமையைப் பாதுக்காக அரசு தவறினால், எங்களின் உரிமைையப் பாதுகாக்க சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். மருத்துவர்களைப் பாதுகாக்க அரசு தவறும் போது, அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் கொடுப்பது குறித்து முடிவு செய்வோம்” எனத் தெரிவித்தார்.