

ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை தேர்வின்போது செல்போன், தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொண்டுவரக் கூடாது என்று விண்ணப்பதாரர் களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்ஸி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக யூபிஎஸ்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்போன், கால்குலேட்டர், புளூ டூத் உள்ளிட்ட எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது.
இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது அடுத்த தேர்வுகளில் அனுமதி மறுப்பது உட்பட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தேர்வு எழுத வரும் போது, விலை உயர்ந்த எந்த ஒரு பொருட்களையும் கொண்டுவர வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறது. ஏனென்றால் அவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க முடியாது. விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனால் அதற்கு ஆணையம் பொறுப்பேற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்நிலை, பிரதான, நேர்முகத் தேர்வு என ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு 3 கட்டங்களாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு வரும் 23-ம் தேதி காலை மதியம் என 2 வேளையும் நடைபெறுகிறதது.