

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையில், நேற்றுமுன்தினம் அமைச்சரவை கூட்டம்நடைபெற்றது. இது குறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க ஊரடங்கு மட்டுமே ஒரே வழி. ஊரடங்கு உத்தரவில் மத்திய அரசு சில தளர்வுளை கொண்டு வந்துள்ளது. ஆனால் தெலங்கானா மாநிலத்தில் தளர்வுஇருக்காது. மே 3-ம் தேதி வரைமத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தும்படி அறிவித்துள்ளது.
ஆனால், தெலங்கானா மாநிலத்தில் மே 7-ம் தேதி வரை ஊரடங்குஅமலில் இருக்கும். மே 1-ம் தேதிக்குள் தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்று முற்றிலும் கட்டுக்குள் வரும் என நம்புகிறேன். அதன் பின்னர் 7-ம் தேதி வரை நாம் ஊரடங்கை பின்பற்றினால் நல்லது என நினைத்து இந்த முடிவை அறிவித்துள்ளேன்.
மே முதல் வாரத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்துக்கு ரூ.1,500 வழங்கப்படும். மே மாதமும் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். மாத ஓய்வூதியம் பெறுவோருக்கு 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும். மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு வீட்டு வாடகையை அதன் உரிமையாளர்கள் கண்டிப்புடன் கேட்கக் கூடாது.
2020-21 கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை ஒரு பைசாகூட உயர்த்தக் கூடாது. இந்தக் கட்டணத்தைக் கூட மாதத் தவணையில் பெற்றுக்கொள்ள வேண்டும். இதை மீறினால் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விமானப் போக்குவரத்துக்கும் மே 7-ம் தேதி வரை தடை நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.