

கோவிட்-19 தொற்று தொடர்பான கேள்விகளை இனி ட்விட்டரில் கேட்டு உரிய பதில்களைப் பெறும் வசதியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்று தொடர்பான பல்வேறு வகையான தகவல்கள் ஊடகங்களில் வருகின்றன. சமூக ஊடகங்களில் நிறைய போலியான தகவல்களும், செய்திகளும் பரவுகின்றன. இவற்றிலிருந்து தெளிவுபெறும் வண்ணம் @CovidIndiaSeva என்ற புதிய பக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இதில் கரோனா தொடர்பான கேள்விகளைக் கேட்டு, உரிய நபர்களிடமிருந்து பதில் பெறலாம். இதுபற்றிப் பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், "சமூக விலகல் மூலம் இந்தியா கரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ட்விட்டர் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சேவையைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இதன்பின், ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான, ஒழுங்கான பதிலை அளிக்கும் வண்ணம் நிபுணர்கள் குழு செயல்படுகிறது. இந்தியக் குடிமக்களிடம் நேரடியாக உரையாடும் வாய்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது. நிகழ் நேரத்தில் அவர்களுடன் தொடர்புகொண்டு, ஒழுங்கான சுகாதாரம் மற்றும் பொதுத் தகவல்களை அவர்களுக்கு இதன் மூலம் தர முடியும்" என்று கூறியுள்ளார்.
CovidIndiaSeva ட்விட்டர் பக்கத்தில் கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய அதிகாரிகளிடம் அனுப்பப்படும். அவர்களிடமிருந்து பதில் பெறப்படும். இதில் நடக்கும் உரையாடல்கள் அனைத்துமே வெளிப்படையாக இருக்கும். எனவே கேட்கப்படும் கேள்விகள், அதற்கான பதில்களை எல்லோருமே பார்த்துப் பலன் பெறலாம். இதில் பதில்கள் பெறப் பொதுமக்கள் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதையும் பகிர வேண்டிய அவசியமில்லை.