கரோனா பாதிப்பில் கடும் தீவிர சூழ்நிலையில் 11 நகரங்கள்: விரைவில் மத்திய குழுக்கள் நேரில் ஆய்வு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

கரோனாவின் கடும் தீவிர சூழ்நிலையில் சிக்கியுள்ளதாக இந்தூர், மும்பை, ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 11 நகரங்களை உள்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. இந்நகரங்களுக்கு மத்திய குழுக்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொடிய கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இந்தியா தற்போது 2-வது லாக் டவுனில் உள்ளது. எனினும் அதன் தீவிரம் குறைந்தபாடில்லை. வைரஸ் தொற்று பாதிப்பு குறைவான மாநிலங்களில் லாக் டவுன் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தீவிரமாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கிப் பிடிக்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் இந்தூர், மும்பை, ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் உள்ள முக்கிய ஹாட் ஸ்பாட் மாவட்டங்களில் லாக் டவுன் மீறல்கள் இருப்பதை ஆராய்ந்த பின்னர் உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.

1. இந்தூர் (மத்தியப் பிரதேசம்), 2. மும்பை (மகாராஷ்டிரா), 3. புனே (மகாராஷ்டிரா), 4.ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) 5. கொல்கத்தா (மேற்கு வங்கம்), 6. ஹவுரா 7. மெடினிபூர் கிழக்கு, 8. 24 பர்கானாஸ் வடக்கு, 9. டார்ஜிலிங், 10. கலிம்பொங் 11) ஜல்பைகுரி ஆகிய இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இந்த மாநிலங்களில் மத்திய அரசின் நிபுணத்துவம்பயன்படுத்தப்பட வேண்டும்.

ஹாட் ஸ்பாட் மாவட்டங்களில் அல்லது வளர்ந்து வரும் ஹாட் ஸ்பாட்களில் அல்லது பெரிய பாதிப்புகள் அல்லது கொத்து கொத்தாக ஏற்படும் பாதிப்புகள் என எதிர்பார்க்கப்படக்கூடிய இடங்கள் மற்றும் கடுமையான சுகாதார அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்கள்கூட மீறல் சம்பவங்கள் நடக்க அனுமதிக்கப்பட்டால், அது இந்த மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் இரு தரப்பு மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

வளர்ந்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்க, வழிகாட்டுதல்கள், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல் மற்றும் பிற தொடர்புடைய சிக்கல்களின்படி லாக் டவுன் நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கும் இணங்குவதற்கும் கவனம் செலுத்துவதற்காக அரசாங்கம் ஆறு இடை மத்திய குழுக்களை அமைத்துள்ளது.

கரோனா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள மாநிலங்களுக்கு இந்தக் குழுக்கள் நேரில் பார்வையிட அனுப்பி வைக்கப்படும்.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்கீழ் மத்திய அரசால் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டுதல்களின்படி லாக் டவுடன் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து மத்திய குழுக்கள் தங்கள் மதிப்பீட்டை வழங்கும். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் வழங்கல், வீடுகளுக்கு வெளியே மக்கள் நடமாட்டத்தில் சமூக விலகல், சுகாதார உள்கட்டமைப்பின் தயார்நிலை, மருத்துவமனை வசதி மற்றும் மாவட்டத்தில் மாதிரி புள்ளிவிவரங்கள், சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பு, சோதனைக் கருவிகள், பிபிஇக்கள், முகக்கவசங்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழிலாளர் மற்றும் ஏழை மக்களுக்கான நிவாரண முகாம்களின் நிலைமைகளைக் கண்டறிந்து மாநில அரசுகளின் செயல்பாடுகளை இக்குழுக்கள் மதிப்பிடும்.

மத்திய குழுக்கள் தங்கள் வருகைகளை விரைவில் தொடங்கும்''.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in