

மும்பையில் 53 பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி்ப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். அங்கு இதுவரை கரோனா வைரஸால் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளொன்றுக்கு சராசரியாக 300 என்ற எண்ணிக்கையில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக மும்பை நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ராவின் மொத்த கரோனா நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் மும்பையில் உள்ளனர். மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மும்பையில் 53 பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மும்பை மாநகராட்சி உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களில் நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், கேமரா மேன்கள் என பலரும் இடம் பெற்றுள்ளனர்.
மொத்தம் 171 பத்திரிகையாளர்களுக்கு கரோனா பரிசோதனை நடந்தது. அவர்களில் 53 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் யாருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்ததற்கான அறிகுறிகள் ஏதும் முதலில் தென்படவில்லை. ஆனால் சோதனைக்கு பின் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் பத்திரிகையாளர்கள் பணியில் ஈடுபடும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மும்பையில் 53 பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி்ப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ப்டடுள்ளது.