Last Updated : 20 Apr, 2020 02:16 PM

 

Published : 20 Apr 2020 02:16 PM
Last Updated : 20 Apr 2020 02:16 PM

லாக் டவுனை நீர்த்துப்போகச் செய்யவில்லை; இது தவறான புரிதல்: மத்திய அரசுக்கு கேரளா பதில்

கேரளாவின் சில இடங்களில் லாக் டவுன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள அரசு லாக் டவுன் நெறியை நீர்த்துப்போகச் செய்துள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. தவறான புரிதலில் மத்திய அரசு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அதன் வழிகாட்டுதலில்தான் செயல்படுவதாகவும் கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது.

கேரளாவைப் பொறுத்தவரை கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் 14 மாவட்டங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சிவப்பு, பச்சை, ஆரஞ்சு-ஏ மற்றும் ஆரஞ்சு-பி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள பகுதிகளில் லாக் டவுன் படிப்படியாகத் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் திங்கள்கிழமை முதல் கேரளாவில் 7 மாவட்டங்கள் உள்ளடக்கிய 2 மண்டலங்களில் லாக் டவுன் தளர்த்த முடிவு செய்தது. அதன்படி கேரள அரசு இரண்டு மண்டலங்களில் லாக் டவுன் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக அறிவித்துள்ளது. மற்றவற்றுடன் தனியார் வாகனங்கள் ஒற்றைப்படை அடிப்படையில் செல்லவும், திங்கள்கிழமை முதல் ஹோட்டல்களில் உணவு பரிமாறவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

லாக் டவுன் நெறிமுறையை மாநில அரசு தளர்த்திய பின்னர் திங்களன்று நூற்றுக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர். இதன்படி ஓட்டுநரைத் தவிர இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்ல நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இருசக்கர வாகனம் இருந்தால், ஓட்டுநர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

உள்ளூர் பட்டறைகள், முடி திருத்தும் கடைகள், உணவகங்கள், புத்தகக் கடைகள், நகராட்சி வரம்புகளுக்கு உட்பட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் குறுகிய தூரத்திற்கு பஸ் பயணம், நான்கு சக்கர வாகனங்களின் பின் இருக்கையில் இரண்டு பயணிகள் மற்றும் ஸ்கூட்டர்களில் பில்லியன் பயணம் ஆகியவை கேரள அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகளாகும்.

உணவருந்தும் சேவைகளில், திங்கள்கிழமை முதல் பசுமை மற்றும் ஆரஞ்சு-பி மண்டலத்திலும், ஏப்ரல் 24 முதல் ஆரஞ்சு-ஏ மண்டலத்திலும் இரவு 7 மணி வரை ஹோட்டல் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவதாக அரசாங்க உத்தரவு தெரிவித்துள்ளது.

இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. உணவகங்களைத் திறக்கவும், நகரங்களில் பஸ் பயணம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களைத் திறக்க அனுமதிக்கும் கேரள அரசின் முடிவு மிகவும் தவறானது. இது கடும் ஆட்சேபனைக்குரியது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்வதோடு, பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005 இன் கீழ் வெளியிடப்பட்ட ஏப்ரல் 15 உத்தரவை மீறுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 15-ம் தேதி வெளியிடப்பட்ட மத்திய அரசின் ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளைத் திறக்க அனுமதிக்கும் லாக் டவுன் நடவடிக்கைகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மாநில அரசுகளுக்கு ஏப்ரல் 17 அன்று அளிக்கப்பட்டது என்று கேரள அரசுக்கு எழுதிய கடிதத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ஆட்சேபனைக்கு கேரள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தவறான புரிதல் என்று கூறியுள்ளது.

திங்கள் கிழமை ஊடகங்களைச் சந்தித்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ''லாக் டவுன் வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்யவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகங்களிடம் கூறியதாவது:

"லாக் டவுன் தளர்வுசெய்யப்பட்டதில் கேரளா மீது தவறான புரிதலை மத்திய அரசு கொண்டுள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதல்களின்படிதான் நாங்கள் தளர்வுகளை வழங்கியுள்ளோம். சில தவறான புரிதல்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதன் அடிப்படையில்தான் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளது. நாங்கள் ஒரு உரிய விளக்கம் அளித்தவுடன், அது அனைத்தும் வரிசைப்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. இது ஒரு தவறான புரிதல். நாங்கள் அதை மாற்றுவோம். லாக் டவுன் மற்றும் நெறிமுறையை எளிதாக்குவது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு புதிய விஷயமாகவே உள்ளது. சில மணிநேரத்தில் மாநில அரசு மத்திய அரசின் சந்தேகங்களை நீக்கும்''.

இவ்வாறு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x