

சமூகத்தில் நலிவுற்றோர், விளிம்புநிலையில் உள்ள மக்கள், தொழிலாளர்கள், நகர்ப்புற சேவகர்கள் ஆகியோருக்கு உதவும் வண்ணம் ரிலையன்ஸ் அறக்கட்டளை சுமார் 3 கோடி பேருக்கு உணவளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
கரோனா பாதிப்பினால் நாட்டில் மே 3ம் தேதி வரை லாக்-டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள், முதியோர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் முதற்கட்ட நிதியுதவிக்குப் பிறகு எந்த ஒரு ஒரு நிதியுதவியையும் அறிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் சாடி வரும் நிலையில் நாட்டில் நடிகர்கள் விளையாட்டு வீரர்கள், சமூக நல ஊழியர்கள் என பலதரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்ட பொருளாதார நலிவுற்றோருக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி கூறும்போது, “இந்தத் திட்டத்தில் தினசரி கூலி தொழிலாளர்கள், குடிசை வாழ்மக்கள், நகர்ப்புற சேவை வழங்குனர்கள், தொழிற்சாலை தொழிலாளிகள், முதியோர் இல்லங்கள், அனாதையில்லத்தில் இருப்போர்கள் உட்பட 3 கோடி பேர் பயனடைவார்கள். லாக்-டவுன் நீட்டிப்பினால் பாடுபடும் இந்திய குடிமக்கள் மீது நம் கருணை உள்ளங்களின் கவனம் செல்லட்டும்.
இந்தியாவுக்கு எப்போது தீங்கு ஏற்படுகிறதோ நம் மக்கள் ஒற்றுமையுடன் அதனை எதிர்கொண்டு மீண்டுள்ளனர். இந்த கரோனாவுக்கு எதிராகவும் நாம் வித்தியாசமாக எதையும் செய்யப்போவதில்லை இதே ஒற்றுமைதான் நம்மைக் காப்பாற்றப் போகிறது. சேர்ந்து வெல்வோம்” என்று நம்பிக்கை அளித்தார்.
“இது கடினமான காலம், நீங்கள் கவலையுடன் இருக்கிறீர்கள் ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் தனியர்கள் அல்ல.
எனக்கும் முகேஷ் அம்பானிக்கும் நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு முக்கியமானது. தேவையுள்ளவர்களுக்கு உணவு அளிக்க உறுதி பூண்டுள்ளோம், நம் பண்பாட்டில் அன்னதானமே மகாதானம். உணவே பிரம்மம் என்று நம் உபனிஷத்துக்கள் கூறுகின்றன” என்றார் நீதா அம்பானி.
பிரிஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து ரிலையன்ஸ் 100 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 சிறப்பு மருத்துவமனையை உருவாக்கியுள்ளது. தற்போது இது 250 படுக்கைகளாக விஸ்தரிக்கப்படுகிறது.
மேலும் சுகாதார பணியாளர்களுக்காக ரிலையன்ஸ் நாளொன்றுக்கு ஒரு லட்சம் முகக்கவசங்களைத் தயாரித்து வருகிறது. இதோடு அவசரநிலை வாகனங்களுக்கு இலவச எரிபொருளையும் ரிலையன்ஸ் வழங்குகிறது.
பல்வேறு நிவாரண நிதியங்களுக்கு, பிரதமர் கேர்ஸ் உட்பட ரிலையன்ஸ் இதுவரை ரூ.535 கோடி நன்கொடையளித்துள்ளது.