

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் தண்டா பகுதியில் லாக்டவுனை மீறி பிஸ்கெட் வாங்குவதற்காக வெளியே வந்த முஸ்லிம் நபர் ரிஸ்வானை போலீஸார் தாக்கியதால் அவர் 3 நாட்கள் சென்று மரணமடைந்ததாக வந்த செய்திகளை போலீஸார் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக தண்டா போலீஸ் நிலைய அதிகாரி சஞ்சய் குமார் பாண்டே கூறியதாவது:
“5 நாட்களுக்கு முன்பாக ரிஸ்வான் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து காயமடைந்தார். அவரை குடும்பத்தினர் குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிசை பலனளிக்கவில்லை, இதனையடுத்து மூட்டு, எலும்பு சிகிச்சை நிபுணரிடம் காட்டுமாறு பரிந்துரைத்துள்ளார்.
ரிஸ்வான் தந்தை இஸ்ரய்ல் அரசு மருத்துவ மையத்துக்கு அழைத்துச் சென்றார், அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், அங்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது.
ஏப்ரல் 17ம் தேதி அவர் மரணமடைந்தார். அரசு மருத்துஅர் இவர் 5 நாட்களுக்கு முன்னால் காயமடைந்ததாகவும் மேலும் செப்டிசீமியா நோய் அவருக்கு இருந்ததால் மரணமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
அந்தப் பகுதியில் உள்ளவர்களும் ரிஸ்வானின் தந்தையும் போலீஸார் அடித்ததால் ரிஸ்வான் பலியானதாகக் கூறுகின்றனர். ஆனால் அப்பகுதியின் சிசிடிவி வீடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில் இதற்கான ஆதாரங்கள் இல்லை.
குடும்ப டாக்டரும் விபத்தில் அவர் காயமடைந்ததாகத் தெரிவித்தனர். அவருக்கு செப்டிசீமியா நோயும் நுரையீரல் நோயும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்றார்.
ஆனாலும் சமூக ஆர்வலர்கள் போலீஸார் மருத்துவர்கள் உள்ளிட்டோரை ‘சரிகட்டி’யிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
ரிஸ்வானின் குடும்ப மருத்துவர் வீடியோ ஒன்றில் ரிஸ்வானை முதலில் தன்னிடம் அழைத்து வந்த போது வண்டியிலிருந்து விழுந்துவிட்டதாக பெற்றோ தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் ரிஸ்வானின் வலது தொடை காயமும் இடது கால் வீக்கமும் சந்தேகத்தை வரவழப்பதாக இருந்ததாக சிலர் தெரிவிக்கின்றனர்.
ரிஸ்வான் தாயார் சனம் காத்தூன், ‘ என் மகன் 5 ரூபாய் எடுத்துக் கொண்டு பிஸ்கெட் வாங்கவே சென்றான். என் மகனை போலீஸ் அடித்தே கொன்று விட்டது’ என்று புலம்பினார்.
ரிஸ்வானின் தந்தை இஸ்ரைல் கூறும் போது, “போலீசார் பொய் கூறுகின்றனர், வாகனத்தில் இருந்து விழுந்தானாம், எங்களிடம் எந்த ஒரு வண்டியும் இல்லை என்பதுதான் உண்மை. அவனுக்கு வண்டியும் ஓட்டத்தெரியாது. அவன் தொழிலாளி, நான் பஞ்சர் ஒட்டி பிழைத்து வருபவன்” என்றார்.
உ.பி. போலீஸ் வரலாற்றில் இன்னொரு புரியாத புதிர் மரணமாகியுள்ளது இது, ஆனாலும் பெற்றோர் வேதனைக்கு யார் ஆறுதல் என்ற கனத்த கேள்வியை இது எழுப்பியுள்ளது.