Published : 20 Apr 2020 08:19 AM
Last Updated : 20 Apr 2020 08:19 AM

சிஏஏவை எதிர்த்த மாணவர்கள் கைதுக்கு இந்தி திரைக் கலைஞர்கள் கண்டனம்

மும்பை: குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும்இடையே கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மோதல் கலவரமாக மாறியது. இந்தப் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை டெல்லி போலீஸார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து இந்தி திரையுலகைச் சேர்ந்த அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், மகேஷ் பட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜனநாயக நாட்டில் அரசின் சட்டத்தை எதிர்த்து போராட மக்களுக்கு உரிமை உள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களும் போலீஸாரும் அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வைரஸை ஒழிக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டிய சூழலில் கூட ஏற்கெனவே நடந்த போராட்டத்தில் அமைதியான முறையில் கலந்து கொண்டவர்களை போலீஸார் கைது செய்தது அதிர்ச்சியளிக்கிறது. டெல்லி போலீஸாரின் மனிதாபிமானமற்ற, ஜனநாயக விரோதமான இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x