

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக 2-வது கட்டமாக மே 3-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள லாக் டவுன் முடிந்தபின் ரயில், விமான சேவை தொடங்கப்படுமா என்பது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட லாக் டவுனால் உள்நாட்டு, சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்தும், பயணிகள் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் மே 3-ம் தேதியுடன் லாக் டவுன் முடிவதால் அதன்பின் ரயில், விமான சேவை தொடங்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
''பிரதமர் மோடி லாக் டவுனை சரியான நேரத்தில் அமல்படுத்தியுள்ளார். மற்ற நாடுகளின் தலைவர்களைப் போல் குழப்பத்துடன், இரு மனதுடன் அமல்படுத்தவில்லை. நாளை முதல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்க உள்ளன. மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நம் நாடு லாக் டவுனை சிறப்பாகக் கையாண்டுள்ளோம்,
விரைவில் இதிலிருந்து விடுபடுவோம். நம் கையாண்டு வரும் மிகப்பெரிய லாக் டவுனை உலகமே பாராட்டி வருகிறது. ஆனால், லாக் டவுன் நிரந்தரமானது அல்ல. விரைவில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்குவது அவசியம். உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் நாம் அதிகமான உயிரிழப்புகள் வராமல் தடுத்துள்ளோம்.
லாக் டவுன் தீர்வல்ல என ராகுல் காந்தி பேசியிருப்பது அவர் கரோனா வைரஸ் குறித்து இன்னும் அதிகமான தெளிவுடன இருப்பது அவசியமாகிறது. நாம் கடைப்பிடிக்கும் லாக் டவுன் உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்துகிறோம் எனத் தெரிவிக்கிறார்கள்
தற்போது நம்மிடம் 700 கோவிட்-19 மருத்துவமனைகள், ஒரு லட்சம் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள், 11 ஆயிரம் தீவிர சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள், முகக்கவசம் ஆகியவையும் தீவிரமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நாளை முதல் கிராமங்களில் பாதியளவு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கும். குறிப்பாக வேளாண் பணிகள், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, மீன்பிடித்தொழில், 100 நாள் வேலைத்திட்டம் போன்றவை செயல்படத் தொடங்கும்.
மே 3-ம் தேதிக்குப் பின் ரயில் சேவை, விமானப் போக்குவரத்து தொடங்குவது குறித்து இதுவரை மத்திய அரசு எந்தவிதமான ஆலோசனையும் நடத்தவில்லை. இப்போதுள்ள சூழலில் அதுபோன்ற ஆலோசனைகள் நடத்துவதும் பயனற்றதுதான்.
ரயில் சேவையும், விமான சேவையும் ஒரு நாள் நிச்சயம் தொடங்கும். ஆனால், எந்த நாள் தொடங்கும் என்பது இந்த நேரத்தில் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் சூழலை ஆய்வு செய்து வருகிறோம்.
விமான நிறுவனங்கள் 4-ம் தேதி டிக்கெட் முன்பதிவைத் தொடங்கினால் என்ன? விமான சேவை தொடங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் ஹர்திக்சிங் பூரி ஏற்கெனவே கூறிவிட்டார். அரசின் முடிவைக் கேட்டு டிக்கெட் முன்பதிவை விமான நிறுவனங்கள் தொடங்கலாம்''.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.